Advertisment

“மனநல காப்பகத்தில் கம்ப்ளீட் மனித உரிமை மீறல்; உடனே சஸ்பெண்ட் பண்ணுங்க...” - திடீர் ஆய்வுக்குப் பின் அமைச்சர் மா.சு அதிரடி

publive-image

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,அன்னவாசல் அரசு மருத்துவமனைக்குள் திடீரென நுழைந்தவர் அதே வளாகத்தில் உள்ள மனநல காப்பகத்திற்குள் சென்றார். தனியார் தொண்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் காப்பகம் உள்ளே மூடப்பட்டிருந்தது.

பெண் காப்பாளர் பூட்டைத்திறந்துவிட உள்ளே சென்றவரைக்காப்பகத்தில் சிகிச்சையில் இருந்த பெண்கள் வணக்கம் சார் என்று அமைச்சரை அன்போடு வரவேற்றதைப் பார்த்துநெகிழ்ந்த அமைச்சர், “நீங்க எல்லாம் எந்த ஊரு...” என்று கேட்க, அவர்களின் சொந்த ஊர்களைச் சொன்னார்கள். “எவ்வளவு நாளா இருக்கீங்க...” என்று விசாரித்தவரிடம்,2 வருடம்3 வருடம் என்று சொன்னார்கள். பெண்கள் இருந்த அறை லைட்கள் எரியவில்லை. “ஏன் இன்னும் லைட் போடல” என்றார்.

“காப்பகத்தில் எத்தனை பேர் இருக்காங்க...” என்று அமைச்சர் காப்பாளரிடம் கேட்க, ‘59 பெண்கள் சார்’ என்றார். “இவங்க எல்லாரும் தரையில தான் படுக்கணுமா? பெட் இல்லயா? உங்க வீட்டு பெண்களை இப்படி வச்சிருப்பீங்களா?” என்று அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டபோது பெண் காப்பாளருக்கு ஏதும் சொல்ல முடியவில்லை.

Advertisment

“எல்லாரும் சாப்டீங்களா... என்ன சாப்பாடு கொடுப்பாங்க” என்று கேட்க, ‘தினமும் ரசமும் சோறும் தருவாங்க” என்றபோது முகம் இருண்டவர், “வேற தொட்டுக்க கூட்டு பொரியல் தரமாட்டாங்களா?” ‘இல்ல ரசம் சோறு தான்’ என்று மீண்டும் சொன்னார்கள். “கிச்சன் எங்கே இருக்கு” என்றபோது, கிச்சனும் பூட்டி இருந்ததை அமைச்சர் கேட்ட பிறகே திறந்து விட்டனர். சுத்தம், சுகாதாரம் இல்லாத சமையலறையைப் பார்த்து முகம் மாறியது. “யாரு இங்கே டி.டி? ஒரு மருத்துவமனைக்குள்ள இருக்கிற காப்பகத்தில் மனித உரிமை மீறல் நடக்குது. இதை டிடியும் கண்டுக்கல டாக்டரும் கண்டுக்கல. தினமும் ரசம் சோறு மட்டும், படுக்கிறது தரையில... உடனே கீழ்பாக்கம் ஃபோன் பண்ணி அந்த அதிகாரிய வந்து பார்க்கச் சொல்லுங்க தொண்டு நிறுவன ஒப்பந்தத்தை கேன்சல் பண்ணச் சொல்லுங்க” என்றார்.

9.30 நிமிடங்கள் ஆய்வுக்குப் பிறகு வெளியே வந்தவர், துறை உயர் அதிகாரிக்குத்தொடர்பு கொண்டு, “கம்ப்ளீட் மனித உரிமை மீறல் மருத்துவமனை வளாகத்தில் நடக்குது. இதை டிடி கண்டுக்கல. உடனே நடவடிக்கை எடுங்க. கான்ட்ராக்டையும் ரத்துப் பண்ணுங்க. கீழ்பாக்கத்திலிருந்து உடனே வரச் சொல்லுங்க... வந்து எல்லாத்தையும்சரி பண்ணச் சொல்லுங்க. ஒரு வாரத்தில் மறுபடியும் வருவேன்.” என்று பேசி முடித்தார்.

பின்னர் புதுக்கோட்டை சென்றவர் அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “அன்னவாசல் மனநல காப்பகத்தை கண்காணிக்காத டிடி ராமு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அன்னவாசல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்”என்றார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மனநல காப்பகத்தில் ஆய்வு செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hospital inspection Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe