Skip to main content

தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
fg

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக  வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள், பால் கடைகள் தவிர மீதி அனைத்துக் கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

'வெளியே வரமாட்டோம்...' -ஊரடங்கு முடிந்தும் வீட்டை விட்டு வெளியே வராத குடும்பத்தினர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

Shocking incident in Kumari where the family did not come out of the house even after the corona lockdown

 

வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவிற்கு பிறகும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்களது குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசித்து வருபவர் பேசியஸ் அலெக்சாண்டர்-மாலதி தம்பதியினர். இவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் தந்தையான அலெக்சாண்டர் குடும்பத்தாரை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்தது.

 

புகாரை அடுத்து சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். வீட்டின் வெளிப்பக்க கேட் உள்பக்கமாக பூட்டிய நிலையில் அதை திறக்க வலியுறுத்தியும் யாரும் திறக்கவில்லை. இதனால் எகிறி குதித்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் பூட்டிய வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் பேச்சு கொடுத்தனர். அப்பொழுது பெர்சியஸ் அலெக்சாண்டரின் மனைவி மாலதி 'எங்க எல்லோருக்கும் கொரோனா வந்து இருக்குன்னு கொண்டு போகணும் அவ்வளவு தானே உங்களது திட்டம்' என்று கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய மாலதி தங்களுக்கு சொந்தமான கடையில் இருந்து கொண்டு வாடகை தராமல் ஒரு நபர் தங்களை கொல்ல முயற்சிப்பதாகவும், அவரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் தங்களை தாக்குவதற்கு சிலர் மறைந்திருப்பதாகவும் அதனால் தாங்கள் வீட்டுக்குள்ளே இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அப்பொழுது தீயணைப்பு அதிகாரி ஒருவர் பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் 'இரண்டு வருடங்களுக்கு முன்பு கடைக்கு முன்பாக பிரார்த்தனை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்களே' என கேட்டதற்கு 'ஆமாம் அதைத்தான் இங்கே செய்து கொண்டிருக்கிறோம்' என்றார் பெர்சியஸ். இப்படி எந்தவிதத்திலும் பிடிகொடுக்காமலும் சரியான காரணத்தை சொல்லாமலும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராமல் அடம்பிடிக்கும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.