Skip to main content

புதுக்கோட்டையில் விமான விபத்து என்று வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
 Complaint seeking action against a rumor in Pudukkottai

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா மேலவசந்தனூர் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அங்குள்ள கண்மாயில் பயங்கர சத்தத்துடன் குட்டி விமானம் ஒன்று விழுந்து தீ பற்றி எரிவதாக காட்டுத் தீயை போல தகவல்கள் பரவியது. அத்துடன் 11 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்றும், ஒரு விமானம் உடைந்து கிடப்பது போன்ற சில படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.


இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர் இளைஞர்கள் மூலம் விமானம் விழவில்லை. விமான உதிரிப் பாகங்களும் இல்லை என்பதையும் ஆனால் பயங்கர சத்தம் எழுந்தது. அதன் பிறகு கண்மாயில் கருகிய புல், கருவேல மரங்கள் ஆங்காங்கே தீ பற்றி எரிந்தது என்பதை உறுதி செய்து நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டோம்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் விமான விபத்து ஏதும் நடக்கவில்லை. வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் பேட்டியளித்தார். இந்த நிலையில்தான் கண்மாயில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய தீயணைப்பு துறையினர் பார்வையிட்டனர். தொடர்ந்து புதுக்கோட்டை தடயவியல் சோதனை அதிகாரிகள் வந்து எரிந்து கிடந்த பல பகுதிகளில் இருந்து சாம்பல்களை சோதனைக்காக சேகரித்துள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள் அந்தப் பகுதி முழுவதும் சோதனை செய்து விமானத்தின் எந்த பாகமும் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.

 

 


இந்த நிலையில் முதன் முதலில் விபத்திற்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்மாயில் உடைந்து கிடப்பதைப் போன்று பழைய விமான விபத்து படத்தை வெளியிட்டவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஆவுடையார்கோயில் தாசில்தார் மார்டின் லூதர்கிங். அறிவுறுத்தல்படி களபம் கிராம நிர்வாக அலுவுலர் சதீஷ்குமார் திருப்புணவாசன் காவல் நிலையத்தில்  வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்று பதிவு செய்த போலிஸார் உடனடியாக அந்த மனுவை சைபர் கிரைம்க்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் சில நாட்களில், சமூக வலைதளங்களில் உடைந்த விமானம் படம் வெளியிட்ட நபரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்