Complaint that refuses to admit students who do not pay school fees! Tamil Nadu government ordered to respond

கடந்தாண்டு பள்ளி கட்டண நிலுவை தொகையை செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் சேர்த்து கொள்ள மறுப்பதாக எழும் புகார் குறித்து பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடப்பு 2021-22 ம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்து கொள்ள, கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி தனியார் பள்ளிகள் பெற்றோரை வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisment

கட்டண பாக்கியை செலுத்தும்படி நிர்பந்திக்காமல், மாணவர்களை அடுத்த வகுப்புக்கு முன்னேற்றுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 2021-22ம் கல்வியாண்டுக்கான புத்தகங்களை வழங்கி, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. கட்டண பாக்கியை தள்ளுபடி செய்து, ஆன்லைன் வகுப்புகளை திறமையான முறையில் நடத்த மாற்று நடைமுறைகளை கண்டறிய கல்வித்துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைப்பதுடன், குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுப்படி கடந்தாண்டு 75 % கட்டணம் மட்டுமே வசூலிக்க அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு அமைத்து அது செயல்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தார். இதையடுத்து, வழக்கு தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisment