Advertisment

ராமநாதபுரத்திலிருந்து முதல்வருக்கு சென்ற புகார்... களத்திற்கு நேரடியாக விரைந்த அமைச்சர்!!

Complaint from Ramanathapuram to the Chief Minister ... Minister rushed directly to the field

Advertisment

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூரில் அமைந்துள்ள ராமநாதபுரம் காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருமற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து இன்று (14.06.2021) நேரில் ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க 2009ஆம் ஆண்டு காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது.

இதனால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 100 எம்.எல்.டி நீர் வழங்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சரியாக நீர் விநியோகிக்கப்படவில்லை என ராமநாதபுரத்திலிருந்து முதலமைச்சருக்குப் புகார் சென்றது. அந்தப் புகாரின் அடிப்படையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் கே.என். நேரு, ராஜகண்ணப்பன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என். நேரு, “கலைஞர் அவர்களால் ராமநாதபுரம் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் 100 எம்.எல்.டி என்ற அளவில் வழங்கப்பட்டுவந்த நீர், தற்போது 75 எம்.எல்.டி மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பு, முறைகேடாக தண்ணீர் எடுக்கப்படுவது, பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் இத்தகைய பிரச்சனை நிலவிவருகிறது. ராமநாதபுரம் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து ஆய்வு மேற்கொள்வோம். அதன் பின்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநரும், தமிழ்நாடு ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குநருமான மகேஷ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 16 லட்சம் மக்கள் பயன்பெறுகிறார்கள்.

Advertisment

அதை 20 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தால் ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். இந்த திட்டத்தின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்யப்படும், பின்னர் விரைவில் முதலமைச்சர்முடிவெடுப்பார்.

அதேபோல ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோர மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது” என கூறினார். இந்த ஆய்வின்போது ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மத்திய மாவட்டப் பெறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், ஒன்றியச் செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe