ADVERTISEMENT

ஊராட்சி ஒன்றிய பணிகளில் தி.மு.க குறுக்கிடுவதாகப் புகார்! அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

04:17 PM Jan 12, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் தி.மு.க.வினர் குறுக்கீடுகள் செய்வதாகவும், அ.தி.மு.க மற்றும் பிற கட்சி கவுன்சிலர்களை தி.மு.க.வில் சேருமாறு வற்புறுத்துவதாகவும் கூறி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அ.தி.மு.க. புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்பிரமணியத்திடம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன், அண்ணாகிராமம் ஒன்றிய குழு தலைவர் வி.ஜானகிராமன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ், குமராட்சி ஒன்றிய குழு தலைவர் பூங்குழலி பாண்டியன், துணைத்தலைவர் ஹேமலதா, நல்லூர் ஒன்றிய குழு தலைவர் செல்வி ஆடியபாதம், துணைத் தலைவர் ஜான்சிமேரி, புவனகிரி ஒன்றிய குழு தலைவர் சி.என்.சிவபிரகாசம், துணைத்தலைவர் வ.வாசுதேவன், கீரப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், துணைத் தலைவர் காஷ்மீர் செல்வி, கம்மாபுரம் ஒன்றியக்குழு தலைவர் மேனகா விஜயகுமார், துணைத் தலைவர் முனுசாமி, ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகஜீவன்ராம், பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் மோகன சுந்தரம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில், "தி.மு.க ஆளுங்கட்சியாக வந்தவுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அத்துமீறி அதிகாரம் செலுத்தி அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் மிரட்டி வருகின்றனர். வளர்ச்சிப் பணிகளிலும் குறுக்கீடு செய்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய தீர்மானங்கள், ஒப்பந்தங்கள் மூலமாக விடப்பட்ட பணிகளிலும் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டுகின்றனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. மற்றும் பிற கட்சி கவுன்சிலர்களை தி.மு.க.வில் சேருமாறு மிரட்டுகின்றனர்.

விருதாச்சலம் ஒன்றிய குழு தலைவர் மீது கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதியும், நல்லூர் ஒன்றிய குழு தலைவர் மீது கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி விருதாச்சலம் கோட்டாட்சியரிடம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர். அதில் நல்லூர் ஒன்றியக் குழு தலைவருக்கு எதிராக வழங்கப்பட்ட மனுவில் அ.தி.மு.க கவுன்சிலர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, கடிதம் போலியாக வழங்கப்பட்டதாக உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நல்லூர் ஒன்றிய குழு கூட்டத்தை வரும் 20ஆம் தேதி கூட்டுவதாக கோட்டாட்சியர் அறித்துள்ளார். ஆனால் அதற்கு முந்தைய தேதியில் கொடுக்கப்பட்ட விருதாச்சலம் ஒன்றிய தலைவர் மீதான புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டத்தின் படி நடக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் ஆகியோர், "தி.மு.க.வினரின் அரசியல் அதிகாரத்திற்கு அதிகாரிகள் துணை போகக் கூடாது. சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும். இல்லை என்றால் கட்சித் தலைமையிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT