Advertisment

செங்கல்பட்டில் எழுந்த புகார்! ஈரோடு தேர்தல் அதிகாரி வீட்டின் சோதனை பின்னணி

Complaint in Chengalpat! Erode Electoral Officer House raid

Advertisment

ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக இருப்பவர் சிவக்குமார்(47). கடந்த மாதம் நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார். இவர் ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் நகராட்சியில் சிவக்குமார் ஆணையாளராக இருந்தபோது அப்போதைய பல்லாவரம் நகராட்சி பொறியாளராக கருப்பையா ராஜா என்பவர் இருந்தார். சிவக்குமார், கருப்பையா ராஜா இருவரும் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இருவரும் சேர்ந்து விதிகளை மீறி ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. முதற்கட்ட விசாரணையில் கடந்த 2015 ஆம் ஆண்டு 11 பள்ளிகளில் 184 கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 11 பள்ளிகளில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடந்தபோது 184 கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பணியாளர்கள் 47 கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்தியதாகப் பதிவாகியுள்ளது. இதற்கு வெறும் ரூ.1.7 லட்சம் மட்டுமே செலவாகும் ஆனால் அந்த தனியார் நிறுவனம் 184 கழிப்பறைகளை சுத்தம் செய்ததாகக் கூறி ரூ.8.5 லட்சம் வாங்கியுள்ளது. அந்த தனியார் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.1.10 கோடி கொடுத்ததாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு இதே தனியார் நிறுவனத்திற்கு கழிப்பறை சுத்தம் செய்யும் பணிக்கு ரூ.9.75 லட்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு கொசு மருந்து தெளிப்பது தொடர்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.1.14 கோடி கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. யானைக்கால் நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகளில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. மருந்துகள் வாங்கப்பட்டதாகவும்கூறப்பட்டுள்ளது. ஆனால் கொள்முதல் செய்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை. மேலும் அந்த மருந்துகளை முறையாக விநியோகம் செய்யவில்லை என்றதகவலும் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார்ஈரோட்டில் சிவக்குமார் வசிக்கும் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதைப் பற்றிய தகவல் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அளிக்கப்பட்டது. அதன் பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஆணையாளர் சிவக்குமார் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்துவது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் சிவக்குமார் சென்னையிலிருந்து ஈரோடுக்கு உடனடியாக புறப்பட்டார். மாலை 3.50 மணி அளவில் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டு முன்பு தயாராக நின்று கொண்டிருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் சென்றனர். வீட்டின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது. வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத பணம் உள்ளதா? என்றும் போலீசார் வீடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அறையாகச் சென்று சோதனை நடத்தினார்கள். வீட்டின்முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் போலீசார் சோதனை செய்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. சுமார் 9 மணி நேரம் நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe