Complaint against supporting actress for fraud of 30 lakh rupees!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலைச் சேர்ந்த பகலவன் ராஜா (எ) ஆனந்தராஜ் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

Advertisment

இதில் நடிப்பதற்காக ஆட்களை தேடியபோது திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்புவைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார். திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். இவரை வைத்து கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன் ராஜா வெளியிட, இருவருக்குமான நெருக்கம் அதிகமாகியுள்ளது. திவ்யபாரதி பகலவன் ராஜாவிடம் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர். அப்போது திவ்ய பாரதி தன்னுடன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், அந்த குழந்தைகளை தான் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் திவ்ய பாரதி கூறியுள்ளார்.

Advertisment

இதனால், பகலவன் ராஜா அவரை காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த பகலவன் ராஜாவின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். ஆனால் திவ்ய பாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். ஒவ்வொரு முறை திருமண பேச்சு எடுக்கும் போதும் ஏதாவது காரணம் கூறி தடுத்துள்ளார்.திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதி தங்கியுள்ளார். வீட்டுச் செலவுக்கென மாதம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் பகலவன் ராஜா கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவிற்காக பணம் வேண்டும் எனவும் ஒன்பது லட்சம் கேட்டு வாங்கியுள்ளார். அதோடு பகலவன் ராஜாவிடம் ஆசை வார்த்தை கூறி எட்டு பவுன் தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் பொழுதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார் திவ்யபாரதி.

இதனால் சந்தேகம் அடைந்த பகலவன் ராஜா, திவ்யபாரதியை பற்றி விசாரிக்க, அவரின் முழு விவரங்கள் அதன் பிறகே தெரியவந்துள்ளன. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதும் அவருக்கு பிறந்தது தான் அந்த இரண்டு பெண் குழந்தைகள் என்பதும் தெரியவந்தது. தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பகலவன் ராஜா தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திவ்யபாரதி மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்த விஷயம் திவ்விய பாரதிக்கு தெரியவே கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பகலவன் ராஜா மீது புகார் கொடுத்துள்ளார். அதில் விளம்பரத்திற்காக நடித்துக் கொடுத்ததற்கு மட்டுமே பணம் வாங்கியதாகவும், எந்தவித ஆசை வார்த்தைகளும் கூறவில்லை. மேலும் தனக்கு இயக்குநர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்ததாகவும், தன்னை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக ரூபாய் 10 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் திவ்ய பாரதி போலீஸ் விசாரணையில் பகலவன் ராஜா மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருக்கிறார்.

இந்த நிலையில், இருவர் கொடுத்த புகார்களைத் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது.