
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக பணியாற்றி வருபவர் முனைவர் ஜெயக்குமார் (54). இவர் மீது முகவரியின்றி ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 7ம் தேதி அதன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மீண்டும் 27ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. ஆனால் எந்தவித முகாந்திரமின்றி உரிய விசாரணை மேற்கொள்ளாமல் கல்லூரி முதல்வர் சுகந்தி அறிக்கை ஒன்றை இயக்குநரகத்திற்கு அனுப்பி உள்ளார் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்தக் கல்லூரியில் பணிபுரியும் தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி எஸ்சி /எஸ்டி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்டதற்கு, ‘நான் விசாரணை செய்து அறிக்கை அனுப்பியுள்ளேன்’ என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி எஸ்சி /எஸ்டி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கண்ணையன், “கல்லூரி முதல்வர் தன்னிச்சையாக பழிவாங்கும் நோக்கோடு உரிய விசாரணை செய்யாமல் விசாரணை அறிக்கையை கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி உள்ளார். பேராசிரியர் முனைவர் ஜெயக்குமார் பதவி உயர்வை தடுக்கும் நோக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு இதேபோல் அவர் மீது ஒரு பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. அதன் விசாரணையில் இவர் மீது எந்த தவறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி உயர்வு வரவுள்ள நிலையில், அதை தடுக்கும் நோக்கில் தற்பொழுது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் கூறாமலும் முனைவர் ஜெயக்குமார் அவரிடத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளாமலும் இயக்குநரகத்திற்கு அறிக்கை அனுப்பியது தவறான செயலாகும். மேலும், இயக்குநரகம் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது. மாணவிகள் சம்பந்தப்பட்டது என்பதால், விசாகா குழு அமைக்கப்பட்டு அவர்கள் தான் முறைப்படி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும். ஆனால், குழுக்கள் அமைக்கப்படவுமில்லை தன்னிச்சையாக கல்லூரி முதல்வர் சுகந்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது குறித்து நாளை மறுநாள் கல்வி இயக்குநரக இயக்குநரை சந்தித்து உரிய விளக்கம் அளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பன்னாட்டு பேராசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகி பேராசிரியர் லியோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்சி /எஸ்டி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் கதிரவன், மோகன்ராஜ், பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.