Advertisment

புதுப்பெண்ணை கடத்தியதாக புகார் - மாஜிஸ்ட்ரேட் உத்தரவினால் உடைந்து அழும் வீரகனூர் இன்ஸ்பெக்டர்!

j

ஆத்தூர் அருகே, காதல் மனைவியை கடத்தியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வாலிபர் அளித்த புகாரின்பேரில், அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி சேலம் மாவட்ட எஸ்.பி.க்கு ஆத்தூர் ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரகனூரில் உள்ள கவர்பனை லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெயபிரகாஷ் (28). அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகள் கிருத்திகா (28). இருவரும் உறவினர்கள். ஜெயபிரகாஷூம், கிருத்திகாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

Advertisment

கடந்த ஆகஸ்ட் 21, 2018ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் வீட்டைவிட்டு ஓடிச்சென்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். மகளை கடத்திவிட்டதாக கிருத்திகாவின் தந்தை வீரகனூர் போலீசில் புகார் அளிக்க, நேற்று முன்தினம் (23ம் தேதி) புதுமணத்தம்பதிகள் இருவரும் வழக்கறிஞர்கள் உதவியுடன் ஆத்தூர் முதலாவது ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜராகினர்.

அப்போது கிருத்திகா, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், காதல் கணவருடன் செல்வதாகவும் கூறினார். காதல் தம்பதிகள் ஆஜராக வந்ததை அறிந்த இருதரப்பு பெற்றோர், உறவினர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கோர்ட் வளாகத்தில் கூடியிருந்தனர்.

இதையடுத்து அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும்படி வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்திற்கு மாஜிஸ்ட்ரேட் சிவகுமார் உத்தரவிட்டார். அதன்படி புதுமணத்தம்பதிகளை காரில் ஏற்றிக்கொண்ட இன்ஸ்பெக்டர், மணமகனின் வீட்டுக்குச் செல்வதற்கு பதிலாக ராசிபுரம் சாலையில் வாகனத்தை விடச்சொன்னதாக தெரிகிறது.

சந்தேகம் அடந்த ஜெயபிரகாஷ், கவர்பனைக்குச் செல்லாமல் ஏன் ராசிபுரம் சாலையில் செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் சண்முகம், 'ஒழுங்கு மரியாதையாக அந்தப் பெண்ணை பெற்றோரிடம் விட்டுவிடு. இல்லாவிட்டால் உன் மீது கஞ்சா வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன். அவங்க அப்பா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துருக்காரு. நீ 5 லட்சம் கொடுத்துடு. விட்டுடறேன்,' என மிரட்டியதாக ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரையும் மல்லியக்கரை போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்ற இன்ஸ்பெக்டர் சண்முகம், அங்குள்ள போலீசாருடன் சேர்ந்து கொண்டு, சுட்டுக்கொன்னுடுவேன் என்று மிரட்டியதாகவும் ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அளித்துள்ள புகார் மனுவில் ஜெயபிரகாஷ் கூறியுள்ளார்.

இதையடுத்து, கிருத்திகாவை காரில் நாவக்குறிச்சிக்கு கடத்திச்சென்று அவருடைய உறவினர் வீட்டில் விட்டுவிட்டதாகவும், அங்கு சென்ற தன்னை இன்ஸ்பெக்டர் தாக்கி, துரத்திவிட்டார் என்றும் புகாரில் கூறியுள்ளதோடு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்ட்ரேட் சிவகுமார், புகாரில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் 24 மணி நேரத்துக்குள் இன்ஸ்பெக்டர் சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்ட காவல்துறையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும், இன்னும் வீரகனூர் இன்ஸ்பெக்டர் மீது எந்த ஒரு வழக்கும்பதிவு செய்யப்படவில்லை.

இதுகுறித்து நாம் இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் விசாரித்தோம். பல இடங்களில் பேச முடியாமல் உடைந்து அழுதார்.

ins

''புகார் அளித்துள்ள ஜெயபிரகாஷும், அவர் காதல் திருமணம் செய்து கொண்ட கிருத்திகாவுக்கு முறைப்பையன் உறவுமுறைதான் ஆகிறது. ஆனாலும், கிருத்திகாவை மற்றொரு உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய அப்பா தங்கராஜ் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில்தான் கிருத்திகாவும், ஜெயபிரகாஷூம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியாமல் தஞ்சாவூர் பெரிய கோயில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

கிருத்திகாவை கடத்திவிட்டதாக வந்த புகாரின்பேரில் அவர்களைத் தேடிச்சென்றேன். ஜெயபிரகாஷை தொடர்பு கொண்டபோது, நாங்களே ஆத்தூர் கோர்ட்டில் ஆஜராகிறோம். அங்கே வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அதன்படி அவர்கள் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜரானார்கள். கணவருடன் செல்ல விரும்புவதாக அந்தப் பெண்ணும் கூறிவிட்டார்.

அப்போது கிருத்திகா தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டதன்பேரில் பெண்ணின் பெற்றோரிடம் பேச கிருத்திகாவுக்கு மாஜிஸ்ட்ரேட் அனுமதி அளித்தார். அவர்கள் ஏதேதோ பேசி, அந்தப் பெண்ணின் மனதை மாற்றிவிட்டனர். அதனால் திடீரென்று பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கிருத்திகா கூறினார். பின்னர் மாஜிஸ்ட்ரேட்டே தலையிட்டு, அவர்களை பாதுகாப்பாக அவர்கள் சொல்லும் இடத்தில் கொண்டு போய் விட்டுவிடுமாறும், கீழே உறவினர்கள் சூழ்ந்து கொண்டு இருப்பதால் கோர்ட் சேம்பர் வழியாக வெளியேறிடுமாறும் கூறினார். அதன்படி அவர்களை அழைத்துக்கொண்டு ராசிபுரம் சாலையில் கிளம்பினேன். அப்போது என்னுடன் ஆண் போலீஸ் ஒருவரும், பெண் போலீஸ் ஒருவரும் வந்தனர். அந்தப் பெண்ணின் மாமா சின்னதுரை என்பவர் நாவக்குறிச்சியில் இருப்பதால் அங்கே கொண்டுபோய் விடுமாறு கூறினர். ஜெயபிரகாஷின் உறவினர் ஒருவரும் அங்கே இருக்கிறார்.

அவர்களை அந்த கிராமத்தில் கொண்டுபோய் விட்ட பின்னர், 'தங்களை போலீசார் பாதுகாப்பாக நாவக்குறிச்சியில் வந்துவிட்டனர்,' என அவர்கள் கைப்பட எழுதிக்கொடுத்த கடிதத்தையும் பெற்றுக்கொண்டேன். இதற்கிடையே, கிருத்திகாவின் தாய்க்கு ஹார்ட் அட்டாக் வந்து, மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் சின்னதுரைக்கு கிடைக்க, அவர் கிருத்திகாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். இதுதான் நடந்தது.

இத்தனை வருட சர்வீஸில் என் மீது தவறான புகார்களின்பேரில் பத்திரிகையில் செய்தி வந்ததில்லை. தமிழ்நாடு பூராவும் இருந்து உறவினர்கள், தெரிந்தவர்கள் எனக்கு ஃபோன் போட்டு விசாரிக்கின்றனர். இன்னும் 8 மாதத்தில் ஓய்வு பெறவுள்ள நிலையில் என் மீது நான் பணம் கேட்டதாக கற்பனையான புகாரை ஜெயபிரகாஷ் அளித்திருக்கிறார் (பேச முடியாமல் அழுதார்).

என்ன நடந்தது என்பதை என்னுடன் வந்த போலீசாரையும் நீங்கள் விசாரித்துக்கொள்ளலாம். என் தரப்பு நியாயத்தைக்கூட கேட்காமல் என் மீது வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார். போதாதற்கு ஏடிஜிபி வரை புகார் அளித்திருப்பது வேதனை அளிக்கிறது,'' என்றார்.

inspector shanmugam Salem veerakanur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe