
பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களைப் பெற தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு செயல்பட்டுவருகிறது. எந்தத் துறை சார்ந்த புகார்களாக இருப்பினும் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்க முடியும். புகார் எந்தத் துறையைச் சார்ந்ததோ அந்தத் துறைக்கு, அந்தப் புகார்கள் அனுப்பப்பட்டு 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுக்க பொது மக்கள் தலைமைச் செயலகத்துக்கு வருவது அதிகரித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வரின் தனிப்பிரிவு கடமையே என செயல்பட்டதால் இந்தப் பிரிவைப் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில், திமுக ஆட்சியில் பொது மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால் மக்களின் வருகை அதிகரித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளுக்காக ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் கோட்டைக்கு வருவதும், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மேலும், கரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுக்க தினமும் நேரில் வர வேண்டிய அவசியமில்லை. நேரில் வருவதைத் தவிர்த்து, இணைய வழி சேவைகளைப் பயன்படுத்தி அதன் மூலம் புகார்கள் தெரிவிக்கலாம் என்று தற்போது பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. நேரில் கொடுக்கப்படும் புகார்களுக்கும், இணையவழியாக கொடுக்கப்படும் புகார்களுக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளே பின்பற்றப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.