
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது கரைப்புதூர். இந்த பகுதியில் நவீன் என்பவருக்குச் சொந்தமான தனியார் சாயத் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் நேற்று (19.05.2025) மாலை 4 ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷ வாயு தாக்கி ஊழியர்கள் மயக்கம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருப்பினும் சுண்டமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் வேணுகோபால் ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் ஹரி சின்னச்சாமி, கிருஷ்ணன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இத்தகைய சூழலில் தான் ஹரி ஹரிகிருஷ்ணன் இன்று (20.05.2025) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. மேலும் சாய ஆலைக்குச் சீல் வைப்பது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
திருப்பூர் சாய ஆலையில் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கச் சாய ஆலை ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.