Skip to main content

உயர் வகுப்பினர் இடஒதுக்கீட்டுக்கான வருமான சான்று வழங்குவதை நிறுத்தியதற்கு எதிரான வழக்கு! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு! 

Published on 24/06/2020 | Edited on 24/06/2020

 

community certificate chennai high court

 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்காக, சமர்ப்பிக்க வேண்டிய வருமான சான்று மற்றும் சொத்து சான்றுகள் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக, 10 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்து, மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அந்த உத்தரவில், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள், இந்த சலுகையை பெற தகுதியுடையவர்கள் ஆவர். இந்த இடஒதுக்கீட்டு சலுகையை பெற, அந்தந்த தாசில்தார்களிடம் இருந்து, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சொத்து மற்றும் வருமான சான்றுகள் வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த ஜூன் 4- ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.

 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ரெட்டி நல சங்கத்தின் சார்பில், அதன் செயற்குழு உறுப்பினர் கிருபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எந்தக் காரணமும் குறிப்பிடாமல், சொத்து மற்றும் வருமான சான்றுகள் வழங்க வேண்டாம் என பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மனு,  நீதிபதி சுப்பையா மற்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சான்றிதழ் வழங்குவது ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து, வரும் 30- ஆம் தேதி பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்