Skip to main content

அமெரிக்க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்!(படங்கள்)

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

இன்று (29.07.2021) சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது, “அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா நாட்டின் மீது 69 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திவருகிற பொருளாதார தடையினை வாபஸ் பெற வேண்டும். மேலும், அங்குள்ள மக்களைச் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்றைய தினம் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

அமெரிக்காவின் மூக்கிற்கு கீழே 60 கிலோமீட்டர் தொலைவிலே இருக்கக்கூடிய கியூபா நாட்டை, அந்நாடு சுதந்திர நாடாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டிருந்த காலத்திலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அந்த ஆட்சியைக் கவிழ்த்து சதி செய்வதற்கு ஒரு பொருளாதார தடையை அமெரிக்க ஏகாதிபத்தியம் விடுத்திருக்கிறது. கியூபாவோடு எந்த நாடும் பொருளாதார உறவுகொள்ளக்கூடாது. மேலும், வர்த்தக உறவு வைக்கக்கூடாது என்ற அடக்குமுறையைப் பிரயோகித்து அந்த நாட்டு மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கரோனா காலத்தில் அந்த நாட்டு மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் தடுப்பூசிகளை அனுப்பக் கூடாது என சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது. சுதந்திரமாக இருக்க வேண்டிய ஒரு நாட்டை அடக்குமுறையின் மூலம் நிர்மூலமாக்குகிற அமெரிக்காவை எதிர்த்து பல நாடுகளும் கண்டன குரலை எழுப்பி வருகிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையில் 184 நாடுகள் இந்தத் தடையை வாபஸ் வாங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் கூட இன்றைக்கு அமெரிக்கா அடிபணியாமல் அதிகாரத்தைப் பயன்படுத்திவருகிறது. எனவே அராஜகத்தைக் கண்டித்தும், பொருளாதார முறையில் மக்களைக் கண்டிக்கும் இந்தப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது” என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.