Communist party Mutharasan speech in vck meeting in chennai

Advertisment

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விசிக சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஜனநாயகப் பாதுகாப்பு அறப்போர் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசிக கட்சியின் தலைவர் எம்.பி தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர் ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, திராவிடர் கழகம் கலி. பூங்குன்றன், ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தலைவர் வசீகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் பேசுகையில், “நம்மை பெருமைப்படுத்திக்கொள்ள இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை; நாட்டிற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குஏற்பட்டிருக்கும் ஆபத்தை அச்சுறுத்தலை தடுத்துநிறுத்த வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜனநாயக முறைப்படி ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வாய்ப்பு உண்டு. அதன்படி ஒரு கட்சி தோல்வியடைவதும், இன்னொரு கட்சி வெற்றி அடைவதும் ஜனநாயகத்தின் இயல்பு. பாரதிய ஜனதா கட்சி ஒரு காலகட்டத்தில் இரண்டு எம்.பி.க்களை மட்டுமே கொண்டிருந்தது. அப்படி விசிக, கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பிகளைக் கொண்டுள்ளது. வருகின்ற 2024ல் இந்த நிலை மாறும். அப்படி மாற்றுகின்ற சக்தி மக்களுடையது. மக்கள் நிச்சயம் மாற்றுவார்கள். இதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை சீர் குலைக்கத்தான் 2014 முதல் மெல்ல பாஜக அரசு நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறது.

Advertisment

தனது காலம் முடிவடைகிற காரணத்தால் பழிவாங்கும் நோக்கம் வேகமடைந்துள்ளது. அதானியையும் அம்பானியையும் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தைசெயல்படாமல் செய்கிறார்கள் இந்த மோடியரசு. வழக்கமாக எதிர்க்கட்சிகள்தான் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில்பிரச்சனை ஏற்படுத்துவார்கள். ஆனால், இங்கோ தலைகீழாக இருக்கிறது. பாசிசம் ஒருபோதும் வெற்றி பெறாது. இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக இருந்த, கோடிக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் பாணியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார். அப்படி பின்பற்றினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை மோடி உணர வேண்டும். ஹிட்லரின் முடிவு பரிதாபகரமான முடிவு மட்டுமல்ல, வெட்ககரமான முடிவு.

இறுதியில் தற்கொலை செய்துகொண்டு ஹிட்லர் இறந்தார். அந்த நிலைமை மோடியே உங்களுக்கு ஏற்படக்கூடாது என்பது எங்களின் விருப்பமாகும். 140 கோடி மக்களுக்கு பிரதமராக இருக்கும் நீங்கள் தற்கொலை செய்துகொண்டு மரணித்தால் அது இந்த நாட்டிற்கு ஏற்படும் அவமானமாக இருக்கும். ஆகவே பாசிசம் ஒருபோதும் வெற்றி பெறாது” என்று பேசினார்.