ADVERTISEMENT

“ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்யக் குழு...” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

08:15 PM Oct 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சங்கத்துடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 6வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று மாலை 6 மணியளவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்து 359 பேர் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியில் உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்று வரும் நிலையில், அவர்களுக்கான ஊதியம் 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு 10 லட்சம் ரூபாயில் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

சம வேலைக்குச் சம ஊதியம் எனும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்தக் குழு 3 மாதத்துக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். எனவே ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுவதால் பணிக்குத் திரும்ப வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT