
சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் ரோடு, அண்ணா பல்கலைக்கழக புதிய ஏசி டெக் நியூ பிளாக் விடுதி வளாகத்தில், காவல்துறை சார்பில் கரோனா சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிப்படைந்த காவல்துறையினர் மற்றும் காவல்துறையினருடைய குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக covid-19 கேர் சென்டர் PHASE- II மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
கரோனா தொற்று தடுப்பு பணியில் சென்னை மாநகரக் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து தற்போது வரை, உயர் அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் 3,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 2வது அலையில் இதுவரை 324 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சென்னை மாநகரக் காவல்துறையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (27.04.2021) கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், சிகிச்சை பெற்றுவரும் 39 காவலர்களிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து, தொற்று பாதித்த காவலர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த சிறப்பு மையத்தில் 360 படுக்கை வசதிகளுடன், 24 மணி நேர மருத்துவர்கள் பராமரிப்புடன், ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் போலீஸார் அனைவருக்கும் தரமான இலவச உணவு, மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த திறப்பு விழாவின்போது கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.