Commission of Inquiry on Vice Chancellor Surappa! Tamil Nadu Government Action!

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு, அரசாணை பிறப்பித்திருக்கிறது. இந்த அதிரடி அரசாணை, அண்ணா பல்கலைக் கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் வெடித்தபடி இருந்தன.

Advertisment

தமிழரல்லாத ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏன்? என்கிற கேள்வி எதிரொலித்தது. பல்கலைக்கழகத்தை உயர் சிறப்பு அந்தஸ்திற்கு உயர்த்துவது குறித்து தமிழகஅரசிடம் விவாதிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பியது. உயர்கல்வி விவகாரத்தில் அமைச்சரையும் மிஞ்சிய சூப்பர் அமைச்சராகச் செயல்பட்டார் சூரப்பா.

சூரப்பாவின் நடவடிக்கைகளையும், அவரது நிர்வாகத்தில் நடக்கும் சீர்கேடுகளையும் தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

தன்னிச்சையாகக் கடிதம் எழுதியது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சூரப்பாவின் விளக்கம் ஏற்கப்படவில்லை.இந்த நிலையில், சூரப்பா மீது பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் தமிழக அரசை முற்றுகையிட்டன. இதனை முதல்வர் பழனிசாமியின் கவனத்துக்குச் சமீபத்தில் கொண்டு சென்றிருந்தார் அமைச்சர் கே.பி.அன்பழகன். அப்போது நடந்த ஆலோசனையை அடுத்து, தற்போதுஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளதுபழனிசாமி அரசு.

Advertisment

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், மேற்குறிப்பிட்ட விவரங்கள், புகார்கள், புகார் அளித்தவர்கள் அனைத்தும் விரிவாகப் பதிவிடப்பட்டுள்ளன. இந்த ஒரு நபர் விசாரணைக் குழு, 3 மாதத்தில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.