Skip to main content

அதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர  இந்திய அரசு மறைமுகத் திட்டம்!  பெ.மணியரசன்

Published on 04/05/2018 | Edited on 04/05/2018
cauveri

 

காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும்!
 என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
 பெ. மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:  
’’காவிரி வழக்கில் நேற்று (03.05.2018) தீபக் மிஸ்ரா ஆயம் நடத்திய விசாரணையும் கூறிய முடிவுகளும் அந்த ஆயத்தின் மீது கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தவர்களையும் ஏமாற்றிவிட்டது. 

 

கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குத் தலைமை அமைச்சரும் மற்ற நடுவண் அமைச்சர்களும் போய்விட்டதால் அமைச்சரவையைக் கூட்டி – அதில் காவிரிக்கான செயல் திட்டத்தை வைத்து ஒப்புதல் கேட்க வாய்ப்பில்லை, எனவே மேலும் இரண்டு வாரம் தள்ளி காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், தீபக் மிஸ்ரா ஆயத்தின் முன் கூறினார். 

 

mani

 

கே.கே. வேணுகோபாலின் இந்தப் பொய்க் கூற்றை ஏற்றுக் கொண்ட தீபக் மிஸ்ரா, நரேந்திர மோடி அரசைக் கண்டிப்பதுபோல் பாவனை காட்டினார். இவ்வாறு வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல் கூறிய நாளுக்கு முதல் நாள்தான் (02.05.2018) புதுதில்லியில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் நடுவண் அமைச்சரவை கூடி சுரங்கம், புகையிலை, மருத்துவமனை உள்ளிட்ட ஆறு திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தது. 

 

அதற்கு முன் 2018 ஏப்ரல் 9 அன்று உச்ச நீதிமன்ற விசாரணையில், தீபக் மிஸ்ரா ஆயம் 03.05.2018க்குள் “செயல்திட்டம்” அமைக்க வேண்டுமென்று இந்திய அரசுக்கு ஆணையிட்டது. அதன்பிறகு, 11.04.2018 அன்றும், 25.04.2018 அன்றும், கடைசியாக 02.05.2018 அன்றும் என மூன்று முறை நடுவண் அமைச்சரவை கூடியுள்ளது. அமைச்சரவைக் கூடுவதற்கே நேரமில்லை என்று நரேந்திர மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுவது எவ்வளவு பெரிய பொய்!

 

காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்புடன் – அதிகாரத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற ஒற்றை முழக்கம் தமிழ்நாடு முழுக்க ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அந்தக் கோரிக்கையலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்குடன் உடனடியாக 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்திடம் கோரினார் தீபக் மிஸ்ரா! சற்று நேரத்தில், அதைக் குறைத்து 2 டி.எம்.சி. திறந்துவிட வேண்டும் என்றார். 

 

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கர்நாடகம் நாள்தோறும் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று முதலில் கட்டளையிட்டார் தீபக் மிஸ்ரா. கர்நாடக அரசு அவ்வாறு திறந்துவிட மறுத்துவிட்டது. அதன்பிறகு, 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்துக்கு கட்டளையிட்டார். 

 

அதையும் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. அதன்பிறகு, நாள்தோறும் 2,000 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு அடுத்தடுத்து 4 வாய்தாக்களில் தீபக் மிஸ்ரா கட்டளையிட்டார். அதையும் செயல்படுத்த முடியாது என்று சித்தராமையா மறுத்துவிட்டார். 

 

இதற்காக முதலமைச்சர் சித்தராமையா மீதோ, கர்நாடகத் தலைமைச் செயலாளர் மீதோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தீபக் மிஸ்ரா ஆயம் பதிவு செய்யவில்லை. இப்பொழுது இந்த ஆயம் கட்டளையிட்டபடி 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், பாசன அமைச்சர் எம்.பி. பாட்டிலும் நேற்றே (03.05.2018) கூறி விட்டார்கள். இந்த நீதிமன்ற அவமதிப்புக்கு தீபக் மிஸ்ரா ஆயம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? 

 

அடுத்து, பெயரை மட்டும் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று வைத்துக் கொண்டு, காவிரித் தீர்ப்பாயம் கூறிய அதன் கட்டமைப்பு மற்றும் அதன் அதிகாரங்களையெல்லாம் பறித்து, அதிகாரமற்ற ஒரு “செயல் திட்டத்தை”க் கொண்டு வர இந்திய அரசு முயல்கிறது. 

 

உச்ச நீதிமன்றம் அதற்கு துணை போகும் என்று கருதக் கூடிய நிலையில்தான் அதன் விசாரணை முறை உள்ளது. 

 

நடுவண் அரசின் நீர்வளத்துறை 29.03.2018 நாளிட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்கம் கேட்கும் மனுவில், காவிரித் தீர்ப்பாயம் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை அதிகாரமில்லாத உதவாக்கரை வாரியமாக மாற்றியமைக்கும் நோக்கில்தான் உச்ச நீதிமன்றத்திடம் அது விளக்கங்கள் கேட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு :

1. காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பாயம் சொல்லியதில் தொழில்நுட்பத் துறை அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதை ஆட்சித்துறை அதிகாரிகளையும், தொழில்நுட்பத்துறை அதிகாரிகளையும் கொண்டதாக மாற்றி அமைக்கலாமா?

2. காவிரித் தீர்ப்பாயம், காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து கூறியுள்ளவற்றை மாற்றி அமைக்கலாமா? 

3. இதில் தொடர்புடைய மாநிலங்கள் கூறக் கூடிய மாற்றுக் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மாற்றி அமைக்கலாமா? 

4. இந்த புதிய “செயல் திட்டத்தை” உருவாக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் வேண்டும். 

நடுவண் நீர்வளத்துறையின் விளக்கம் கேட்கும் மனுவின் சாரம் இதுதான்! 

இதன் பொருள், காவிரித் தீர்ப்பாயம் கூறிய “காவிரி மேலாண்மை வாரியம்” என்பதை சாரத்தில் கொன்றுவிட்டு, அதிகாரமில்லாத ஒரு செயல்திட்டத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில், அல்லது வேறொரு பெயரில் கொண்டு வரவே இந்திய அரசு விரும்புகிறது என்பதாகும்! 
நேற்று (03.04.2018) நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், காவிரி செயல் திட்டம் தயாராகிவிட்டது, நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியது மேற்கண்ட சூழ்ச்சிகளையும் உள்ளடக்கியதுதான்! 

 

எனவே, கர்நாடகத்தின் இனவெறிச் செயலுக்கும் நடுவண் அரசின் இனப்பாகுபாட்டு அணுகு முறைக்கும் துணை போகக் கூடிய நிலையில், தீபக் மிஸ்ரா ஆயம் செயல்படும் நிலையில், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே வேண்டும் என்று கோரிக்கையைத் துல்லியமாக்கி, கடுமையாகப் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

 

தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு, இந்திய அரசினுடைய நிர்வாகம் செயல்பட முடியாது என்ற அளவிற்கு ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழர்கள் வலுப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும்! இந்திய அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் செயல்பட முடியாத நிலையை குறிப்பிட்ட காலத்திற்கு உருவாக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

காந்தி சிலை அவமதிப்பு; மோடிக்கு எதிரான வாசகங்களால் பரபரப்பு!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

canada mahatma gandhi statue incident viral in social media  

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் என்பவர் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்கக் கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த அமைப்பின் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்து காவல் நிலைய சிறையில் அடைத்த சம்பவத்தில் அம்ரித் பால் சிங் தலைமையில் சிலர் காவல் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவரை விடுவிக்கக் கூறி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அம்ரித் பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முயன்ற போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதனையடுத்து அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சில நாட்களுக்கு கைது செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், இந்தியா சார்பில் கனடாவிற்கு பரிசாக அளிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள மகாத்மா காந்தி வெண்கல சிலையானது ஒன்று ஓன்டாரியோ மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வியாழக்கிழமை பெயிண்ட் ஊற்றிச் சிதைத்ததுடன், சிலையின் கீழ்ப்பகுதியில் மோடிக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிரான வாசகங்களையும் எழுதியுள்ளனர். இந்த செயல் தற்போது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் லண்டனில் செயல்படும் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு இந்திய தேசியக்கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியைப் பறக்கவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

ஆஸ்திரேலிய பிரதமர் திறந்துவைத்த காந்தி சிலை - மறுநாளே சேதப்படுத்திய மர்மநபர்கள்!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

gandhi statue

 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் முழு உருவ காந்தி சிலை ஒன்றை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வெள்ளிக்கிழமை (12.11.2021) திறந்துவைத்தார்.

 

இந்தநிலையில், திறந்துவைக்கப்பட்ட மறுநாளே அந்த சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "இது அவமானகரமானது. இந்த அளவிற்கான அவமரியாதையைப் பார்ப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. உலகில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார மற்றும் குடியேற்ற தேசமாக இருக்கும் ஒரு நாட்டில், கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை சகித்துக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமானவர்கள் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தின் மீது மிகுந்த அவமரியாதை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

 

சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை, இந்திய அரசால் ஆஸ்திரேலியாவுக்கு பரிசளிக்கப்பட்டது ஆகும். நாட்டின் பிரதமர் திறந்துவைத்த காந்தி சிலை மறுநாளே சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.