colleges government order chennai high court

அரசு கல்லூரிகளில் கொண்டுவரப்படவுள்ள ஒரே ஷிப்ட் நடைமுறையை, தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, உயர்கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு, கல்லூரிகளின் பாட வேளை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி காலை, மாலை என இரு ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டது. காலை 08.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை ஒரு ஷிப்ட், பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஒரு ஷிப்ட் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

Advertisment

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 2020- 21-ஆம் கல்வியாண்டு முதல், பழைய முறைப்படி காலை 09.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை வகுப்புகள் நடத்த அனுமதியளித்து, கடந்த ஜூலை மாதம் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர், அரசாணை பிறப்பித்தார்.

இந்த அரசாணையை, தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளிலும் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த சுந்தரம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் அரசாணை பாரபட்சமாக உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 1,249 தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 22- ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக உயர்கல்வித்துறை செயலாளருக்கும், கல்லூரி கல்வி இயக்குநருக்கும், உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.