
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் என்பவரின் மகள் வினிதா(17). இவர், மயிலாடுதுறையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று வினிதா மற்றும் அவரது தங்கை, தம்பி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்கள் வீட்டில் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் இருந்துள்ளது. அந்த செல்போனை யார் பயன்படுத்துவது என அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக மூவரும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.
இதனைக் கண்ட அவர்களது தந்தை சங்கரன், மூன்று பிள்ளைகளையும் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவரது மகள் வினிதா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்துக் குடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், வினிதாவை சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு வினிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாணவி வினிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.