College student passed away swept away flood

நாமக்கல் அருகே, ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவிஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள சிங்களம்கோம்பையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய இளைய மகள் ஜீவிதா (18). திருச்செங்கோட்டில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 17ஆம் தேதி மாலையில், வழக்கம்போல் கல்லூரி முடிந்து பேருந்தில் சிங்களம்கோம்பைக்கு வந்தார். மகளை அழைத்துச் செல்வதற்காக சிங்களம்கோம்பை பேருந்து நிறுத்தத்தில் இருசக்கர வாகனத்துடன் அவருடைய தாயார் கவிதா காத்திருந்தார்.

மகளை அழைத்துக்கொண்டு கவிதா, சிங்களம்கோம்பை அருகே உள்ள கொக்குப்பாறை ஓடை வழியாகச் சென்றார். அப்போது ஓடையில் நீரோட்டம் வேகமாக இருந்ததால்வாகனத்தைதள்ளிக்கொண்டு சென்றனர். திடீரென்று தண்ணீரின் ஓட்டம் மேலும் வேகமெடுத்ததால் அவர்கள் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த சிலர் ஓடைக்குள் இறங்கி அவர்களை மீட்கப் போராடினர். கவிதா, முட்புதர்ச் செடிகளை பிடித்துக் கொண்டதால் அவரை மட்டும் உயிருடன் மீட்டனர். ஜீவிதா, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சென்னை மீட்புக் குழுவினர், நாமக்கல் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து ஜீவிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியை நிறுத்தி வைத்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை (நேற்று) ஜீவிதாவை தேடும் பணியை மீண்டும் தொடர்ந்தனர். இந்நிலையில், ஓடை நீர் இறுதியாகச் சென்றடையும் சிங்களம்கோம்பை ஏரியில் இருந்து ஜீவிதாவின் சடலத்தைக் கைப்பற்றினர். அவருடைய சடலம், உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எருமப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவி, வெள்ளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் சொந்த கிராம மக்கள் மற்றும் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.