Skip to main content

“நீங்க யாரும் சாக வேண்டாம்; நான் சாகிறேன்...” - தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

college student lost their life kanchipuram

 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிரபாகரன்(48) - கங்கையம்மாள்(42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன்(21), பாலகிருஷ்ணன்(19) என இரு மகன்கள் உள்ளனர். அதில் பாலகிருஷ்ணன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.  கூலி வேலை செய்து வந்த பிரபாகரன் ஒரு கட்டத்தில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை  மகன் பாலகிருஷ்ணன் சமாதானம் செய்து வந்திருக்கிறார். 

 

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பிரபாகரனுக்கும், கங்கையம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்போது பிரபாகரன் கத்தியை வைத்து இருவரில் ஒருவர்தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று கூறி கங்கையம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மகன் பாலகிருஷ்ணன், "நீங்கள் சண்டை போடுவது எங்களுக்கு அசிங்கமா இருக்கு, நீங்க யாரும் சாக வேண்டாம், நான் சாகிறேன்" என்று கூறி பிரபாகரன் வைத்திருந்த கத்தியைப் பிடுங்கி தன்னையே குத்திக்கொண்டார்.  

 

இதையடுத்து பதறிப்போன அவரது பெற்றோர் பாலகிருஷ்ணனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளார் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு. எனவே ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். தி.மு.க. தொண்டர்கள் பொறுப்பேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள் முடிந்து 101 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நாம் அவருக்கு கொடுக்க கூடிய பரிசாக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனப் பேசினார்.

Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து ‘மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல்’ 2 ஆம் கட்ட நாடாளுமன்ற பிரச்சாரப் பயணத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக. தலைவர் தலைமையில் திராவிட மாடல் அரசு வெல்லட்டும். பாசிசம் ஒழியட்டும். BELONG TO THE DRAVIDIAN STOCK” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநில சுயாட்சியின் உரிமைக்குரல் நம் அண்ணாவின் மண்ணில், பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு; பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Acid Incident on 3 female students in karnataka

கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதியில் கடாபா என்ற அரசுக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், நேற்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடகா மாநில பல்கலைக்கழகத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். 

அப்போது, கல்லூரி வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னர் அவர், யாரும் எதிர்பாராத நிலையில் அங்கிருந்த மாணவிகள் மீது திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தில் அலினா, அர்ச்சனா மற்றும் அமிர்தா ஆகிய 3 மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூவரும் அலறித் துடித்ததைக் கண்ட அங்கிருந்த மற்ற மாணவர்கள், படுகாயமடைந்த மாணவிகளை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, மாணவிகள் மீது ஆசிட் வீசி தப்பிச் சென்ற இளைஞரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (28) என்பதும், அவர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அலினாவும், அபினும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவிகள் 3 பேர் மீது, இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.