ADVERTISEMENT

கல்லூரி மாணவி லோகேஸ்வரி மரணம் - கல்வித்துறை, மாவட்டம் நிர்வாகம் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

06:44 PM Jul 13, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தேசிய பேரிடம் மேலாண்மை பயிற்சியின்போது மரணமடைந்த கோவை தனியார் கல்லூரி மாணவி லோகேஸ்வரி மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதில், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே இது போன்ற பேரிடர் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த மு.க.ஸ்டாலின் அறிக்கை: ‘’கோவை அருகில் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பயிற்சியின் போது, பி.பி.ஏ படிக்கும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி லோகேஸ்வரி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உடன் பயிரும் மாணவியர்க்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடர் பயிற்சியை மாணவ மாணவியர்க்குக் கற்றுக் கொடுக்கும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ, அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையளிக்கிறது. குறிப்பாக இரண்டாவது மாடியிலிருந்து குதிக்க வைக்கும் போது இவ்வளவு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது.

பேரிடர் பயிற்சி என்று வரும் போது முதலில் அதில் பங்கேற்போரின் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை கல்வித்துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கவனிக்கத் தவறியதும், அதற்கான வழிகாட்டுதலை வழங்கத் தவறியதும் இது போன்ற உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்துள்ளது .

ஆகவே இது போன்ற பேரிடர் பயிற்சிகள் போதிய பாதுகாப்புகளுடன் நடைபெறவும், பேரிடர் பயிற்சி, நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக் கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதி பெற்ற பிறகே இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT