/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/attur5545.jpg)
காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி கூடமலை மேலவீதி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு நந்தினி, ரோஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ரோஜா என்பவர் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில், தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
இவர் கூடமலையில் உள்ள தனது நண்பர்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் போது, ரோஜாவைப் பார்த்து தன்னை காதலிக்குமாறு அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே இவர்களுக்குள், இந்த காதல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக, முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் கிடைத்த தகவலின் பேரில், சாமிதுரையை அழைத்துக் கண்டித்துள்ளனர்.
இருந்தபோதிலும், அந்த பெண்ணுக்கு சாமிதுரைதொல்லை தந்துள்ளார். இந்த நிலையில், நந்தினிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதால், அதற்கான அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுப்பதற்காக வீட்டில் இருந்து சென்று விட்டனர்.
இந்த தகவலை அறிந்த சாமிதுரை, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று நந்தினி மற்றும் ரோஜாவையும் பார்த்து மீண்டும் மிரட்டியுள்ளார். ரோஜா காதலிக்க மறுத்ததால், தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, ரோஜாவின் மீதும் அவரது அக்கா நந்தினி மீதும் ஊற்றியுள்ளார். இருவரும் தப்பியோடிய நிலையில், பின்னாலே துரத்திச் சென்ற சாமிதுரை, வயலில் கால் தவறி கீழே விழுந்த ரோஜாவின் மீது கல்லை எடுத்து தலையில் போட்டு, பலமாக தாக்கியுள்ளார்.
இதில், ரத்தக் காயத்துடன் ரோஜா மயங்கி கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவரை பரிசோதிக்க மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த கெங்கவல்லி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய சாமிதுரையை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் காவல்துறையினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)