Skip to main content

ஏ.டி.எம். கொள்ளையனிடம் ஏமாந்த கல்லூரி மாணவி! 

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

College student deceived by ATM  robber!
மாதிரி படம்  

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் நந்தினி. இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்றுவருகிறார். இவர், நேற்று முன்தினம் (21.12.2021) மாலை தியாகதுருகம் கடை வீதியிலுள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். மையத்தில் தனது தாயின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று பார்த்துள்ளார்.  

 

அந்த நேரத்தில் அவருக்கு அருகில் நின்றிருந்த மர்ம வாலிபர், “பணம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்த ரெசிப்ட் உங்களுக்கு வரவில்லை. மீண்டும் ஒருமுறை கார்டை செலுத்திப் பாருங்கள்” என்று கூறியுள்ளார். அப்போது அம்மாணவியின் கையிலிருந்த ஏ.டி.எம். கார்டு தவறி கீழே விழுந்துள்ளது. அந்தக் கார்டை எடுத்து அம்மாணவியிடம் கொடுப்பதுபோல, அந்த மர்ம நபர் வேறு ஒரு கார்டை அம்மாணவியின் கையில் கொடுத்துவிட்டு, கீழே விழுந்த கார்டை அவர் எடுத்துக்கொண்டார். 

 

இதைக் கவனிக்காத அம்மாணவி, அந்த மர்ம நபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டை மெஷினில் போட்டு பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றிருக்கிறார். வீட்டிற்குச் சென்ற சில நிமிடங்களில் அவரது தாய் வங்கிக் கணக்கில் இருந்து 29 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக செல்ஃபோனுக்குக் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அம்மாணவி, மீண்டும் ஏ.டி.எம். மையத்திற்குச் சென்று பார்த்தபோது, அந்த மர்ம நபர் அங்கு இல்லை. அப்போதுதான் தன்னிடம் மர்ம நபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டு போலியானது என்பது தெரியவந்துள்ளது. 

 

இதுகுறித்து மாணவி புதுரகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்திற்குச் சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து 29 ஆயிரம் பணம் மோசடி செய்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.