
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன், திடீரென்று மாயமானது குறித்து செவிலியர் கல்லூரி பெண் பேராசிரியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சேலம் சோளம்பள்ளம் காந்திநகரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (29). பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கோவையில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது திருமணத்திற்காக பெண் தேடி வந்தார்.
இதற்காக, ஒரு திருமண தகவல் மையத்தின் சமூகவலைத்தள பக்கத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்த நெய்வேலியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், மனோஜ்குமாருடன் அறிமுகம் ஆனார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகியதில், அது காதலாக மாறியது. பிரியதர்ஷினி, நெய்வேலியில் உள்ள செவிலியர் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.
இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்த அவர்கள், பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் அவரவர் வேலைக்குச் சென்றுவிட்டனர். செல்போனில் மட்டும் நாள்தோறும் பேசி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகு மனோஜ் குமார், பிரியதர்ஷினியை தொடர்பு கொள்ளவில்லை. அவருடைய செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி, சேலம் வந்து விசாரித்தார். ஆனால் அவர் எங்குச் சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அவருடைய பெற்றோரிடம் விசாரித்தபோதும், அவர்களும் மகன் காணாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து பிரியதர்ஷினி, ஆக. 9ம் தேதி, சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.