/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th _1.jpg)
சேலம் அருகே, கிணற்றிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நான்கு பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலத்தை அடுத்த காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்தது. சுடிதார் அணிந்திருந்த அந்தப் பெண்ணின் சடலத்தில் பெரும்பாலான சதை பகுதிகள் தண்ணீரில் ஊறியதால் சிதிலமடைந்து, எலும்புக் கூடாக இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கண்மணி, வனிதா தம்பதியின் மகள் தித்திமிலா (19) கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதிமுதல் காணவில்லை என தந்தை கண்மணி புகார் அளித்திருந்தார்.
அதனால் சந்தேகத்தின்பேரில் அவரை அழைத்து வந்து, கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தைக் காட்டினர். சடலமாக மீட்கப்பட்டது தனது மகள்தான் என்று கண்மணி அடையாளம் காட்டினார். எலும்புக்கூடாக காட்சி அளித்த மகளின் சடலத்தைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
தித்திமிலா, சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்துள்ளார். கடந்த ஆகஸ்ட்6ஆம் தேதி, பாட்டி வீட்டிற்குச் சென்றுவருவதாக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அவர் பாட்டி வீட்டுக்கும் செல்லவில்லை; அவரது வீட்டுக்கும் திரும்பவில்லை. இந்நிலையில்தான் அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
தலை இல்லாமல் வெறும் உடலாக சடலம் மீட்கப்பட்டுள்ளதால் யாராவது அவரதுதலையை வெட்டிக் கொலை செய்து, சடலத்தைக் கிணற்றில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலம் கைப்பற்றப்பட்ட விவசாயக்கிணறு பெரும்பாலும் வறண்டுதான் இருக்கும்.
சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்துள்ளதால் கிணற்றில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால்தான் சடலமும் மிதந்துள்ளது. ஒருவேளை, தண்ணீரில் இரண்டு மாத காலமாக சடலம் ஊறிப்போனதால், தலை பகுதி அழுகிப்போய் தானாகவே துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
இந்த சந்தேகத்தின் அடிப்படையில், அந்தக் கிணற்றில் இளம்பெண்ணின் தலை பகுதி கிடைக்குமா என்றும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். சடலம், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தித்திமிலாவின் பெற்றோரும், உறவினர்களும் வியாழக்கிழமை (அக். 21) காலை திடீரென்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தித்திமிலாவின் தந்தை கண்மணி கூறுகையில், ''மகள் காணாமல் போனது குறித்து அப்போதே காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் வேகமாக செயல்பட்டிருந்தால் ஒருவேளை, என் மகளை உயிருடன் மீட்டிருக்கலாம்.
அதன்பிறகு சேலம் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரிடமும் புகார் அளித்தேன். என் புகார் மனு மீது எஸ்.பி. விசாரணை நடத்தியும் மகள் கிடைக்கவில்லை. என் மகள் கடைசியாக உள்ளூரைச் சேர்ந்த ஒரு பையனிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார். மகளுடைய சாவில் எங்கள் ஊரைச் சேர்ந்த 4 பேர் மீது சந்தேகம் இருக்கிறது. அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கண்ணீருடன் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)