Skip to main content

கல்லூரியில் பேரிடர் மீட்பு பயிற்சி: பயிற்சியாளரின் அலட்சியத்தால், பரிதாபமாக உயிரிழந்த மாணவி!

Published on 13/07/2018 | Edited on 14/07/2018
dead


 

 

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியின் போது பயிற்சியாளர் கீழே தள்ளியதில் தடுமாறி விழுந்த மாணவி படுகாயமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நரசிபுரத்தில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாமாண்டு பிபிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார் 19 வயதான லோகஸ்வரி என்ற மாணவி. இவரது தந்தை நல்லாகவுண்டர். நாதேகவுண்டன் புதூரில் வசித்து வருகிறார்.

 

 


இந்நிலையில் நேற்று கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் 20 மாணவர்களுக்கு நேற்று மாலை 4 மணியளவில் பயிற்சி அளித்தார்.

அப்போது இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக்கொள்வது என்பது பற்றி செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, லோகேஸ்வரி என்ற மாணவி கீழே குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயற்சியாளர் ஆறுமுகம் லோகேஸ்வரியை கீழே தள்ளிவிட்டுள்ளார்.
 
girl
                     மாணவி லோகேஸ்வரி


அதில், நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்த சன் சேடின் மேலே விழுந்த லோகேஸ்வரியின் பின் தலையிலும் வலது கழுத்துப்பகுதியிலும் அடிபட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக லோகேஸ்வரி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 


அரசு மருத்துவமனையில் லோகேஸ்வரி வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குறித்து வழக்கு பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியை பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அனுமதி அளித்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு; பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Acid Incident on 3 female students in karnataka

கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதியில் கடாபா என்ற அரசுக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், நேற்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடகா மாநில பல்கலைக்கழகத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். 

அப்போது, கல்லூரி வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னர் அவர், யாரும் எதிர்பாராத நிலையில் அங்கிருந்த மாணவிகள் மீது திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தில் அலினா, அர்ச்சனா மற்றும் அமிர்தா ஆகிய 3 மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூவரும் அலறித் துடித்ததைக் கண்ட அங்கிருந்த மற்ற மாணவர்கள், படுகாயமடைந்த மாணவிகளை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, மாணவிகள் மீது ஆசிட் வீசி தப்பிச் சென்ற இளைஞரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (28) என்பதும், அவர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அலினாவும், அபினும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவிகள் 3 பேர் மீது, இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடையை மீறி கடலில் குளித்த மாணவி உயிரிழப்பு; தேடச் சென்ற மாணவர்கள் மாயம் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
A student who broke the ban and bathed in the sea lose their live; The students who went to look for magic

காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.

இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.