A college bus collided with a lorry in an accident!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எளையாம்பாளையத்தில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இருந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் மூலம் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை மகாதானபுரம், லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு நோக்கி மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

Advertisment

கல்லூரி பேருந்து ஆண்டான்கோவில் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 7 மாணவிகள் தலை மற்றும் கைகளில் அடிபட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே கல்லூரி பேருந்து கடந்த மாதம் 29ம் தேதி வெண்ணைமலை பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது மோதியதில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டுநர்களின் கவனக் குறைவு காரணமாகவும், அதிவேகமாக பேருந்தை இயக்குவதன் காரணமாகவும் அடிக்கடி இந்த கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளாவதாக மாணவிகள் குற்றம் சாட்டினர்.