Advertisment

இனிமேல் முன்பு போல் இருக்க முடியாது...! - அதிகாரிகளை எச்சரித்த ஆட்சியர்..!

fg

தமிழகம் முழுக்க ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து அவர்களின் குறைகளைக் கோரிக்கை மனுவாகக் கொடுத்து வருகிறார்கள். அந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் அதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அங்கேயே கொடுத்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார். இதுவே தமிழகம் முழுக்க நடக்கும். சாதாரண கிராமப்புற ஏழை எளிய மக்கள் அரசு நிர்வாகத்தை நடத்தும் மாவட்ட ஆட்சியர் அல்லது அவர் அந்த நாள் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தால் மாவட்ட வருவாய் அதிகாரி போன்ற உயர் அதிகாரிகளை நேரில் பார்த்து மனு கொடுப்பது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இப்படி மக்கள் கொடுக்கும் மனு மீது சட்ட முறைப் படி உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்தார்களா என்றால் சென்ற ஆட்சியாளர்கள் காலத்தில் எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.

Advertisment

இந்த நிலையில் தான் புதிய தி.மு.க. அரசின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு மக்கள் தங்களது குறைகளைத் தீர்க்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிக மனுக்கள் வருவதை விட மக்கள் குறைகள் நிறைவு செய்யப்பட்டுக் குறைவான மனுக்கள் வருவதே சிறந்தது என ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுரை வழங்கினார். இறையன்பு அவர்களின் உத்தரவை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் செயல்படுத்த தொடங்கி விட்டார்கள் என்பது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி அறிவிப்பின் மூலம் தெரிய வருகிறது. 18 ந் தேதி ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். அப்போது அவர் அங்கு இருந்த பல்வேறு துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார். அதற்கு அதிகாரிகள் பலரும் சரிவரப் பதில் கூறவில்லை. இதைத் தொடர்ந்து கலெக்டர் அதிகாரிகளை எச்சரித்துப் பேசத் தொடங்கினார்.

Advertisment

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 3 மாத காலத்திற்குள் தீர்வு காண வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரு மனு நிராகரிக்கப்பட்டது என்று பதில் கூறினால் அதற்குத் தகுந்த காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு வேண்டும். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள முடியாதபட்சத்தில் நன்றாக விவரம் தெரிந்த அடுத்த நிலை அலுவலர்களை அனுப்பி வைக்க வேண்டும். ஏதோ பெயருக்கு வந்தோமா போனமா என்றெல்லாம் இனிமேல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. பொதுமக்கள் 20 மனுக்கள் கொடுத்துள்ளார்கள், அதில் 15 மனுக்களுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கை அளவில் கூறாமல் உண்மையாகவே அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்படும் மக்கள் நலத் திட்டங்களை நேரடியாக மக்களுக்குக் கொண்டு போய் சேர்த்தும் பணியில் அனைத்து அரசு ஊழியர்களும் ஈடுபட வேண்டும். அரசு நிர்வாகத்தை நடத்துகிற நம்மைத் தானே மக்கள் நம்புகிறார்கள் அந்த மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற இனிமேலாவது செயல்படுங்கள்..." எனக் கறாராகக் கூறினார் கலெக்டர் கிருஷ்ணனூன்னி.

"ஏதோ இந்த மக்களுக்கு வேலை எதுவும் இல்லாமல் திருவிழாவுக்கு வருவது போல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஈரோடு கலெக்டர் ஆபீசுக்கு வருகிறார்கள் என்ற சிந்தனை தான் இதுவரை அரசு அதிகாரிகளிடம் இருந்தது. இனிமேல் அப்படி யாரும் இருக்க முடியாது தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என கலெக்டர் அறிவித்துள்ளதால் மனுவோடு வரும் மக்களைக் கண்டாலே பயம் கலந்த மரியாதை ஏற்பட்டுள்ளது அரசுத்துறை அலுவலர்களுக்கு" என்றார் வருவாய்த் துறை அலுவலர் ஒருவர். முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரின் உத்தரவுகள் செயல்படத் தொடங்கியுள்ளது நல்ல நம்பிக்கைதான்.

Farmers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe