தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரம்தோறும் பொதுமக்கள் குறைதீர் நாள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் இந்த குறைதீர் முகாமில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க வாரம்தோறும் வருகைதருகின்றனர். குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் செல்வதற்குப் பெரும் சிரமத்திற்கு ஆளாகியதைப் பார்த்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் இலவச ஆட்டோ சேவை வழங்க உத்தரவிட்டார்.