ADVERTISEMENT

கடைக்கு வந்த தம்பதியை கைது செய்ய உத்தரவிட்ட ஆட்சியர்..! 

10:39 AM Apr 13, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஷாப்பிங் மால் உள்ளிட்ட பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வர இ-பதிவு வாங்கும் முறை தொடரும்.

திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10ஆம் தேதியிலிருந்து தடைவிதிக்கப்பட்டது. ஏப்.10ஆம் தேதியிலிருந்து சென்னை கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி. பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதி; நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை. தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அனைத்து தமிழக வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி. தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி தற்போது செயல்பட்டும் வருகிறது. இதனிடையே முகக் கவசம் அணியாதவர்களுக்கு, வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (12.04.2021), ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டூர் எனும் பகுதியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஃபர்னீச்சர் கடை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட அவர், முகக் கவசம் அணியாமல் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த தோரணவாவியைச் சேர்ந்த கணவன் மனைவி மீது வழக்குப் பதிவுசெய்து, கைது செய்ய கோபி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். முகக் கவசம் அணியாத தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT