Skip to main content

ஒரு லட்சம் மாணவர்களுடன் புத்தகம் வாசித்து மாணவர்களை ஊக்கப்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 collector mercy Ramya who encouraged the students by reading book with one lakh students

 

“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஆறாவது புத்தக திருவிழா நிகழ்வு வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை 80 அரங்குகளில் பல லட்சம் புத்தங்களோடு நடைபெற இருக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய ஆளுமைகள், அரசு உயரதிகாரிகள், படைப்பாளிகளின் சொற்பொழிவுகள், சாதனையாளர்களுக்கு விருதுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

இதற்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களான நூறு நாள் வேலைத்திட்டப் பகுதிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நேற்று ஒரு மணி நேரம் வாசிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நிகழ்வில் ஒரு லட்சம் மாணவ மாணவியர்களோடு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்று புத்தகம் வாசித்தார்.   

 

 collector mercy Ramya who encouraged the students by reading book with one lakh students

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், “வாசிப்புப் பழக்கம் மாணவர்களின் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சி. நினைவாற்றலை மேலும் வளர்க்கும், படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் மேம்படக்கூடும். உலகில் பெரிய மாமேதைகள் அனைவரும் புத்தக வாசிப்பினாலும் உருவானவர்களே. இன்றைய விஞ்ஞான உலகில் மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஆகையால் இன்றைய குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அதன் நன்மைகளையும் எடுத்துரைத்து புத்தகம் வாசிக்கத் தூண்ட வேண்டும். அதிலும் மிக முக்கியமாக மாணவிகள் வாசிக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேற்று ஒரு மணி நேரம் புத்தகங்களை வாசித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிர்வாழ போராட்டம்; ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆட்சியர் அலுவலகம் வந்த ஊழியர்

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
 employee came to the collector office with an oxygen cylinder and gave the petition

திருவள்ளூரை அடுத்த ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சிலிக்கான் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி சிகிச்சை அளித்து வந்துள்ளனர் அங்கு அவருக்கு சிகிச்சையில் திருப்தி இல்லாததால் அங்கிருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் என்றால் ரூபாய் 45 லட்சம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பத்து ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் தொழிற்சாலைக்குச் சென்று மருத்துவ உதவிக்காக பணம் கேட்டபோது அவர்கள் பணம் தர மறுத்து விட்டனர். தற்போது மிகப்பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் உடன் செயற்கை சுவாசத்தால் மட்டுமே அவர் உயிர் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது.  இதைத்தொடர்ந்து பிரவீன் குமார் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

ஆக்சிஜன் சிலிண்டர் உடன் வந்து அவரைப் பார்த்து அதிகாரிகள் நீங்கள் ஏன் வந்தீர்கள்? வேறு நபர்களை அனுப்பியிருக்கலாமே எனக் கூறினர் பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் தனியார் தொழிற்சாலையில் நாங்கள் பேசி முடிவு எடுக்கிறோம் எனவும் உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது.