
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த இம்பாலா சுல்த்தான் - நித்தாஷா பர்வின் தம்பதியினரின் மூத்த மகன் இன்சாப் முகமது. இவருக்கு ரய்யான் என்ற இளைய சகோதரியும் உண்டு. இவர் கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தண்ணீரில் யோகா மூலம் 71 நிமிடம் 14 வினாடிகள் மிதந்து 2022 ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் சாதனை புரிந்துள்ளார்.
இதற்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்தார். அதனை முறியடிக்கும் விதமாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ரெக்கார்ட் புக் ஆப் இந்தியாவிலிருந்து இவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த உடன் 26ஆம் தேதி நடந்த குடியரசு தினத்தில் இவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார். மேலும் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் அவருக்கு கபீர் சாகர் விருதுக்கு பரிந்துரைத்துள்ளார். இவருடைய சாதனையை 18 நாடுகளைச் சேர்ந்த ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுப்பற்றி சிறுவர் கூறும் போது, “கின்னஸ் சாதனைக்கு முயன்று வருகிறேன். இந்திய தேசிய அளவில் நமது மத்திய மாநில அரசுகள் வாய்ப்பு வழங்கினால் தேசிய விருது வென்று இந்தியாவிற்கு சமர்ப்பிப்பேன்” என்று கூறினார்.