Skip to main content

எஸ்ஐ அடித்து கொன்ற விவசாயி குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண நிதி... சேலம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! 

Published on 28/06/2021 | Edited on 28/06/2021



 relief.jpg

 

சேலம் அருகே, காவல்துறை எஸ்எஸ்ஐ லட்டியால் அடித்துக் கொன்ற விவசாயி முருகேசனின் குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சனிக்கிழமை (ஜூன் 26) நேரில் சென்று வழங்கினார். 

 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. கடந்த 22ஆம் தேதி, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்துகொண்டிருந்தார். ஏத்தாப்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ பெரியசாமி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

அப்போது எஸ்எஸ்ஐ பெரியசாமி மூங்கில் லட்டியால் சரமாரியாக தாக்கியதில் முருகேசன் கீழே விழுந்தார். இதில் அவருடைய பின்பக்க தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை தாக்கிய எஸ்எஸ்ஐ பெரியசாமி கைது செய்யப்பட்டதுடன், பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார்.  

 

இந்நிலையில், முருகேசனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் உத்தரவின்பேரில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சனிக்கிழமை (ஜூன் 26) காலை முருகேசனின் வீட்டிற்கு நேரில் சென்றார். 
 
 
அவருடைய மனைவி அன்னக்கிளி, மகள்கள் ஜெயபிரியா, ஜெயபிரதா, மகன் கவிப்பிரியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அரசு விதிகளுக்கு உட்பட்டு தேவையான உதவிகள் செய்யப்படும் என குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் அறிவித்தபடி, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையை அன்னக்கிளியிடம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டாட்சியர் (பொறுப்பு) வரதராஜன் உடன் இருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெல்லை சிறுமிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Chief Minister M.K.Stalin praises Nellai girl

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடியில் இன்று காலை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, ராஜகண்ணப்பன், சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில் நிவாரண உதவிகள் வழங்கிய நிகழ்வின் போது ஆட்டோ ஒட்டுநர் பாலசுப்பிரமணியம் என்பவரின் இரண்டாம் வகுப்பு பயிலும் மகள் சேவிதா பகவதி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணப் பணிகளுக்காக முதல்வரிடம் வழங்கினார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நெல்லையில் சிறுக சிறுகச் சேர்த்த பணத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி. நெகிழ்ந்தேன்; நெஞ்சம் நிறைந்தேன். மனிதம் காப்போம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Mikjam storm damage; Funded by actor Sivakarthikeyan

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு மாத சம்பளத்தை வழங்கியதோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து திமுக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நம்மை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த போது, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும், நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.