Skip to main content

கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் செங்கல் சூளைகள் மூடல்... தேர்தலை புறக்கணிக்க தயாராகும் மக்கள்...!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிசைத்தொழிலான நாட்டு செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. அதுபோல் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்பட சில பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஓ.பிஎஸ்.-யின் சொந்த ஊரான பெரியகுளம் பகுதியிலும் அதை ஒட்டியுள்ள கல்லுப்பட்டி, கைலாசம்பட்டி பகுதிகளில் குடிசைத் தொழிலான நாட்டு செங்கல் தயாரிக்கும் சூளைகள் 65-க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளைகளில் அப்பகுதிகளைச் சேர்ந்த நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் மண் அள்ளவும், செங்கல் அடுக்கவும், விறகு அடுக்கவும், செங்கல் காய வைக்கவும் போன்ற பணிகளில் வேலை பார்த்துக் கொண்டு வயிற்றை கழுவி வருகிறார்கள்.

 

 Collector Closure of bricklayers



இந்த நிலையில் தான் இந்த செங்கல் சூளைகளை இழுத்து மூடச் சொல்லி கலெக்டர் அதிரடி உத்தரவிட்டதின் பேரில் அனைத்து சூளைகளும் மூடப்பட்டு சூளை உரிமையாளர்களும், கூலித் தொழிலாளர்களும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். இது சம்மந்தமாக செங்கல் சூளை தயாரிப்பு சங்க உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, "எனது தாத்தன், பாட்டன் காலத்திலிருந்து இதே பகுதிகளில் தான் செங்கல் சூளைகளை நடத்தி வருகிறோம். இது குடிசைத் தொழில் என்பதால் லைசென்சும் இல்லை. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கனிம வளத்துறை அதிகாரிகள் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு சூளைக்கு ரூ.11,800 கட்டினோம். ஆனால் லைசென்ஸ் இதுவரை கொடுக்கவில்லை.

இதனால் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு மாசு கட்டுப்பாட்டுத் துறையில் இருந்து வந்த அதிகாரிகள் புகைக்கூண்டு வைக்க வேண்டும். இல்லையென்றால் சூளையை நடத்தக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் ஒரு சூளைக்கு புகைக்கூண்டு வைக்க வேண்டும் என்றால் அதற்கு பத்து லட்சத்திற்கும் மேல் செலவாகும் அந்த அளவுக்கு எங்களுக்கு வருமானம் இல்லை என்று சொன்னோம். அதற்கு அந்த அதிகாரிகள் புகைக்கூண்டு வைக்கவில்லை என்றால் சூளையை நடத்தக்கூடாது என கலெக்டர் உத்தரவு போட்டு இருக்கிறார் என்று சொல்லிவிட்டு போனவர்கள். மறுநாளே அனைத்து சூளைகளிலும் உள்ள மின் இணைப்பை எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் துண்டித்துவிட்டனர். இதனால் செங்கல் சூளை பணிகள் அனைத்தும் தடைபட்டு போய்விட்டது. உற்பத்தி செய்யப்பட்ட செங்கலை விற்கவும் முடியவில்லை.

 

 

 Collector Closure of bricklayers


அறுத்து காயவைக்க வேண்டிய செங்கல்லும் அப்படி அப்படியே மூடிவைத்து விட்டு உடனே சங்க நிர்வாகிகள் எல்லாம் கலெக்டரை பார்க்க போனால் எங்களை அந்த அம்மா பல மணி நேரம் காக்க போட்டுவிட்டு கடைசியில் கூப்பிட்டு அப்பகுதிகளில் செங்கல் சூளை நடத்தக்கூடாது நீங்கள் வேற தொழில் செய்து கொள்ளுங்கள் எனக் கூறினார். அதன்பின் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-சை மூன்று முறை சந்தித்து முறையிட்டு மனு கொடுத்தும் கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் மற்ற மாவட்டத்தில் உள்ள பகுதிகளான ஆண்டிப்பட்டி, தேனி, போடி, கம்பம், கூடலூர், சின்னமனூர் பகுதிகளில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அப்படியிருக்கும் போது பெரியகுளம் பகுதியில் இருக்கக்கூடிய எங்கள் சூளைகளை மட்டும் கலெக்டர் மூடச் சொன்னதற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

அதிகாரிகளிடம் கேட்கப் போனால் ரோட்டில் புகை வருகிறது. அதனால் விபத்துக்கள் நடக்கிறது என்று கூறி வருகிறார்கள். அப்படி என்றால் மற்ற பகுதிகளில் புகை வரவில்லையா? சூளை வைத்திருப்பவர்கள் எல்லோருமே இரவு 12 மணிக்கு செங்கல் வேக வைக்க தீ வைத்து அதிகாலை ஐந்து மணிக்கு எடுத்துவிடுவோம். அதனால் மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை. அப்படியிருக்கும் வேண்டுமென்றே கலெக்டர் எங்கள் பகுதியில் உள்ள சூளைகளை மூட வைத்துவிட்டார். அதனால் ஒட்டுமொத்த தொழிலாளர்களை திரட்டி தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து இருக்கிறோம். அதோடு எங்கள் வீடுகளிலும், செங்கல்சூளைகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்போகிறோம் அதோடு வருகிற உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிக்க போகிறோம்" என்று கூறினார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளை பற்றி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்டபோது, "அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளினால் பள்ளிக்கூடம், மருத்துவமனை பொதுமக்கள் ஆகியோர் இந்த புகையினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு விபத்தும் அடிக்கொருக்க நடக்கிறது என்று புகார் வந்ததின் பேரில் தான் விதிமுறைகளை பின்பற்றுங்கள். அதற்குண்டான உதவிகளை கூட செய்ய தயாராக இருக்கிறோம். அப்படி இல்லையென்றால் நடத்தக்கூடாது என்று கூறினேன்" என்றார். பின்னர் மாவட்டத்தில் உள்ள தேனி, போடி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், கம்பம் உள்பட சில பகுதிகளிலும்  செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகிறதே என்று கேட்டதற்கு, "அப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம் கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.