Collector calls to apply for unemployment benefits!

Advertisment

சேலம் மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " சேலம் மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன.

எஸ்.எஸ்.எல்.சி வகுப்பில் தோல்வி மற்றும் தேர்ச்சி, அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

Advertisment

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் சமூக மனுதாரர்கள் 45 வயதுக்குள்ளும், இதர சமூகத்தினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு 200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300ம், பிளஸ்2 தேர்ச்சிக்கு 400ம், பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 600 ரூபாயும் காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு 600ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு 750ம், பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 1000 ரூபாயும் மாதந்தோறும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழிற்படிப்பு படித்தவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

Advertisment

உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளளாம். இவ்வாறு ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.