Collapsed government office building;

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், பணி செய்வதற்காக கட்டடம் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான கட்டடங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இப்படிக் கட்டப்பட்ட கட்டடங்களில் ஒன்று, இடிந்து விழுந்து ஒரு மாணவன் உயிரைப் பறித்துள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள கள்ளையன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருடைய மகன் தரணிதரன்(13), அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது நண்பர்களுடன் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து தரணிதரன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த மாணவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.

Advertisment

அங்கு சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தரணிதரனுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் தரணிதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவன் உயிரிழப்பு குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.