Skip to main content

முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த காசு; அரசு கொடுத்த பயிற்சியால் ஆவணமான நாணயம்

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

coin inscribed with the name of the first Rajaraja chola has been found

 

ஆசிரியர் ஒருவர் 12 ஆண்டுகளாக வைத்திருந்த பழமையான செப்புக்காசு முதலாம் ராஜராஜசோழனால் வெளியிடப்பட்டது என்பதை அறிய தமிழ்நாடு அரசு கொடுத்த தொல்லியல் பயிற்சி உதவியுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தில் உள்ள சிவந்திப்பட்டி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி வரலாறு ஆசிரியர் செல்வத்திடம், இளந்திரை கொண்டான் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மாணவர் 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு பழமையான செப்புக்காசை கொடுத்துள்ளார். அக்காசு பற்றி எதுவும் தெரியாததால் செல்வம் அதை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சியின் முதல் சுற்று மதுரையில் நடைபெற்றது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் நாணயங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றி தஞ்சாவூர் ஆறுமுக சீதாராமன் வகுப்பெடுத்தார். இதன்பின் தன்னிடம் இருந்த இந்த காசு முதலாம் ராஜராஜசோழனால் வெளியிடப்பட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

 

coin inscribed with the name of the first Rajaraja chola has been found

 

இதுபற்றி ஆசிரியர் செல்வம் கூறியதாவது, “12 ஆண்டுகளாக என்னிடமிருந்தும் அதன் முழுப்பெருமையும் தெரியவில்லை. மதுரையில் நடந்த தொல்லியல் பயிற்சியால் அக்காசின் சிறப்பை தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு அரசு வழங்கிய இந்தப் பயிற்சி எனக்குள் தொல்லியல் தேடலை விதைத்துள்ளது. இதை என் மாணவர்களுக்கும் கற்றுத்தருவேன். பயிற்சி வழங்கிய அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், ஆணையருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

இக்காசு குறித்து பயிற்சியை ஒருங்கிணைத்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு கூறியதாவது, “வரலாற்றை அறிய நாணயங்கள் உதவுகின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜசோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் தன் பெயர் பொறித்த ஈழக்காசுகளை வெளியிட்டுள்ளான். இவை முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது.

 

இக்காசுகளின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்களும்,  சங்கும் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் “ஸ்ரீராஜராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

3 years imprisonment for refusing to buy Rs 10 coins

 

மத்திய ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயங்களை 2005ல் அறிமுகம் செய்து 2009ல் அதைப் புழக்கத்தில் விட்டது. இந்த 10 ரூபாய் நாணயங்கள் பல்வேறு வடிவமைப்புகளில் இருந்த காரணத்தால் 10 ரூபாய் நாணயத்தில் போலிகள் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. அதேபோல், இந்த நாணயங்களே செல்லாது எனவும் கூறப்பட்டது. அதனால், இந்த நாணயங்களை இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கடைகள் மற்றும் பேருந்துகளில் வாங்குவது மிக மிக குறைவு. இதனால், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு குற்றச்சாட்டு வைத்து வந்தனர். 

 

இதையடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தன. இருப்பினும், இந்த நாணயங்களை வாங்க பலரும் தயங்கி வந்தனர். இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலான ஒரு எண்ணம் உள்ளது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்தபோதும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பொய்யான தகவல் பரவிய வண்ணம் உள்ளது. 

 

பல கிராமங்களில் உள்ள கடைகளில் இந்த நாணயங்கள் மறுக்கப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட 14 வகையிலான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும். அவற்றை செல்லாது எனக் கூறுவதோ அதனைப் பணப்பரிமாற்றத்தின் போது வாங்கவோ அல்லது கொடுப்பதோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ-இன் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம். அந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கோலாகலம்! 

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

Rajaraja Chola's 1038th Sadaya Festival

 

தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா இன்றும் (24ம் தேதி), நாளையும் (25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், “மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் அக்டோபர் 24ம் தேதி காலை முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்படும்” எனத் தெரிவித்திருந்தார். 

 

அந்த வகையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா இன்று தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் புலத் தலைவர் கோ.தெய்வநாயகம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் மு. ராஜேந்திரன், இந்தியத் தொல்லியல் துறை கோயில் அளவீட்டுப் பிரிவு இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால், குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர் இந்திரா அரசு, சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம்பேட்டை ந. செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

 

மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அந்தப் பகுதியே மின் ஒளியில் பிரகாசிக்கிறது.