Skip to main content

கட்சிய இல்ல... கட்சிக் கொடிய கூட உள்ள விடமாட்டோம் - பாஜகவை எதிர்க்கும் மக்கள்

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

coimbatore Villagers are struggle BJP will not be allowed

 

“இங்க பாஜக கட்சிய இல்ல... அவங்களோட கட்சிக் கொடிய கூட உள்ள விடமாட்டோம். அவங்க வந்தாலே எங்க ஒற்றுமை சீர்குலஞ்சுடும்..” என இந்தியாவை ஆளும் கட்சியைக் கண்டு ஒரு கிராமமே பயந்து நடுங்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சிக்கு அருகே உள்ள காந்தி காலனி பகுதியில் ஏறத்தாழ 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 30, 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காந்தி காலனி பகுதியில் தீண்டாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பட்டியலினச் சமூகத்தை சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என அந்தப் பகுதியை சேர்ந்த பாஜகவினர் தகராறு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இதனால், விரக்தியடைந்த ஊர்மக்கள் திடீரெனக் கூட்டம் கூடி இனிமேல் இந்த ஊருக்குள் பாஜக கட்சிக்கு அனுமதியில்லை என அன்றைய தினமே கட்டுப்பாடு விதித்துள்ளனர். இந்தப் பகுதியில் ஏற்பட்ட தீண்டாமை பிரச்சனையால் ஊருக்குள் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இளைஞர்கள் குடித்துவிட்டு பிரச்சனை செய்துள்ளனர். இதையடுத்து, இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாஜக கட்சியை முழுவதுமாக ஒதுக்கி வைத்தனர்.

 

இந்த சூழ்நிலையில், காந்தி காலனியைச் சேர்ந்த சின்ராசு மற்றும் அவரது மகன் சேகர் ஆகிய இருவரும் பாஜக கட்சியில் அண்மையில் இணைந்துள்ளனர். இந்நிலையில், காந்தி காலனி பகுதியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகிய கட்சிகளின் கொடிக்கம்பங்கள் ஏற்கனவே இருக்கிறது. தற்போது, அதனருகில்  பாஜக கொடியை நட வேண்டும் என்பதற்காக கடந்த 23 ஆம் தேதி குழி தோண்டியுள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் பாஜகவினருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

அப்போது, காந்தி காலனி பகுதியில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லாத காரணத்தால் சின்ராசுக்கு ஆதரவாக பக்கத்து ஊரிலிருந்து பாஜகவினர் வரவழைக்கப்பட்டனர். மேலும், பாஜககாரர்கள் ஊருக்குள் வந்தால் தீண்டாமை பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் காந்தி காலனி மக்கள் ஒன்று சேர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக சின்ராசு, சேகர், கனகராஜ் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து காந்தி காலனி மக்கள் கூறும்போது, "ஆதிக்க சாதியினர் கோவிலுக்குள் எங்களை அனுமதிக்கவில்லை. அதனால் நாங்களும் போகவில்லை. இவர்களால் இந்த ஊரில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதையே நிறுத்திவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்கள். மேலும், பாஜகவினர் நம்மிடம் கூறுகையில், “அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இருக்கும்போது, எங்கள் கட்சிக் கொடியை மட்டும் ஏன் புறக்கணிக்கிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசும்போது, “இதுகுறித்து வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், கொடிக்கம்பம் நடுவதற்குரிய வழிகளைப் பார்ப்போம். பயந்து ஒதுங்கி விடமாட்டோம்” என்றார். இந்தியாவை ஆளும் பாஜக கட்சிக்கொடி கூட ஊருக்குள் நுழையக் கூடாது எனக் கண்டிப்பு காட்டும் கிராம மக்களின் செயல் வியப்புடன் பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்