Advertisment

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில்கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

Advertisment

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

Advertisment

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

elephant Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe