
கோவையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, தான் படிக்கும் சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, அதன் காரணமாக கடந்த 11ஆம் தேதி மாலை தற்கொலை செய்துகொண்டார். இது கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் கோவை மாவட்டக் குழுக்கள் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, " கோவையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த பள்ளி மாணவி, ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லையால் 11.11.2021 அன்று மாலை 5 - 6 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த மாணவி அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தியால் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
அந்த மாணவி பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இதை காவல்துறை உடனடியாக விசாரித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதோடு, அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த பாலியல் குற்றத்தை முன்னதாகவே அறிந்திருந்த சின்மயா பள்ளி நிர்வாகத்தின் முதல்வர், துணை முதல்வர் எவரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தக் குற்றத்தில் ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பள்ளியில் வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணை செய்ய வேண்டும். கோவையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாலியல் விழிப்புணர்வு கல்வி அளிக்க வேண்டும்.
கோவையில் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் ICC (Internal complaint committee) முறையாக யுஜிசி வழிகாட்டு அடிப்படையில் அமைத்து அது மாணவர்களுக்கு தெரியும் வகையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும். இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட அளவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், மாணவர் சங்கப் பிரதிநிதிகள் அனைவரையும் இணைத்து ஒரு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்" எனக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.