Advertisment

"எவ்வளவு பெரிய கொடுமை, வலி, வேதனை!"- ஜோதிமணி எம்.பி.!

coimbatore student incident jothimani mp tweets

Advertisment

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பாலியல் துன்புறுத்தலால் கோவை மாணவி தற்கொலை செய்து கொண்டது மனதை கனக்கச்செய்கிறது. குற்றவாளி ஒரு ஆசிரியர். குற்றத்திற்குத்துணை நின்றது பள்ளி நிர்வாகம். எவ்வளவு கொடுமை! ஒரு பெண் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளித்த பிறகும் எப்படி ஒரு பள்ளி நிர்வாகம் அதை கடந்துபோக முடியும்?

இந்த பாலியல் கொடுமை ஏதோ ஒரு பள்ளியில், ஒரு மாணவிக்கு நேர்ந்த சாதாரண குற்றமல்ல. பல பள்ளிகளில், பல நூறு மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக இந்த கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதை ஒரு சமூகமாக நாம் இப்படியே கடந்து போய்விட முடியுமா? இதற்கு ஒரு தீர்வு காண வேண்டாமா?

அந்த இளம்பெண் எத்தனை துயரை,வேதனையை, அவமானத்தை அடைந்திருக்கும்? யாரிடமும் சொல்ல முடியாமல் எப்படி இந்தகொடுமையை தன்னந்தனியே சுமந்திருக்கும்? மீண்டும் எந்த மாதிரியான மனநிலையோடு அந்த கொடூரமான பாலியல் குற்றவாளியை எதிர்கொண்டிருக்கும்?

Advertisment

பள்ளி நிர்வாகம் "பேருந்தில் யாரோ ஒருவர் இடித்துவிட்டது போல் நினைத்துக்கொள்" என்று கடந்து போனபோது எப்படித்துடித்துப் போயிருக்கும்? இனி இந்த வாழ்வே வேண்டாம் என்று ஒரு இளம்பெண் முடிவுக்கு வரும்போது மரணம் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும், அரசு அமைப்புகளுக்கும் கூட நிகழ்கிறது.

நாம் இத்தனை பேர் இருந்தும் அந்த குழந்தை தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக தன்னந்தனியே போராடி தோல்வியுற்று இறுதியாக மரணத்தை தேர்ந்தெடுத்துவிட்டது. எவ்வளவு பெரிய கொடுமை, வலி, வேதனை!

இன்னும் எவ்வளவு காலம் கல்விக்கூடங்களை இப்படி பாதுகாப்பற்ற இடங்களாக வைத்துக் கொண்டிருக்கப் போகிறோம். நேற்று பத்மா சேஷாத்ரி, இன்று சின்மயா வித்தியாலயா நாளை?

நமது பிள்ளைகள் ஏன் பள்ளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளை வெளியில், வீட்டில் சொல்லமுடியவில்லை? ஏன் பாலியல் குற்றவாளிகள் அச்சமற்று திரியும் வீதிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுகின்றனர்? ஏன் அவர்களுக்கு யாருமில்லை? சட்டம், நீதி அவர்கள் வாழும்போது ஏன் வரவில்லை?

இப்படி எத்தனையோ தீராத கேள்விகள் உள்ளன. வெறும் சட்டமும், தண்டனையும் மட்டும் இந்த கொடுமையான குற்றங்களை தடுத்துவிடாது. அவற்றோடு வலுவான உளவியல் ஆதரவும், ஆழமான பாலியல் கல்வியும் தேவை.

கல்விக் கூடங்களில் இம்மாதிரியான பாலியல் குற்றங்கள், சாதிய, பாலின ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் சுதந்திரமான, கனிவு மிகுந்த, அதிகாரம் மிக்க அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் அச்சமற்று அந்த அமைப்புகளை அணுகும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

உளவியல்,சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.இப்படிப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அவை தொடர்ந்து இயங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். உண்மையான கல்விக்கு அடிப்படையான தேவை கண்ணியமும்,பாதுகாப்புமான சூழலுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tweets jothimani congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe