Skip to main content

"எவ்வளவு பெரிய கொடுமை, வலி, வேதனை!"- ஜோதிமணி எம்.பி.!

Published on 13/11/2021 | Edited on 14/11/2021

 

 

coimbatore student incident jothimani mp tweets


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பாலியல் துன்புறுத்தலால் கோவை மாணவி தற்கொலை செய்து கொண்டது மனதை கனக்கச்செய்கிறது. குற்றவாளி ஒரு ஆசிரியர். குற்றத்திற்குத் துணை நின்றது பள்ளி நிர்வாகம். எவ்வளவு கொடுமை! ஒரு பெண் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளித்த பிறகும் எப்படி ஒரு பள்ளி நிர்வாகம் அதை கடந்துபோக முடியும்?

 

இந்த பாலியல் கொடுமை ஏதோ ஒரு பள்ளியில், ஒரு மாணவிக்கு நேர்ந்த சாதாரண குற்றமல்ல. பல பள்ளிகளில், பல நூறு மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக இந்த கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதை ஒரு சமூகமாக நாம் இப்படியே கடந்து போய்விட முடியுமா? இதற்கு ஒரு தீர்வு காண வேண்டாமா?

 

அந்த இளம்பெண் எத்தனை துயரை,வேதனையை,  அவமானத்தை அடைந்திருக்கும்? யாரிடமும் சொல்ல முடியாமல் எப்படி இந்த கொடுமையை தன்னந்தனியே சுமந்திருக்கும்? மீண்டும் எந்த மாதிரியான மனநிலையோடு அந்த கொடூரமான பாலியல் குற்றவாளியை எதிர்கொண்டிருக்கும்?

 

பள்ளி நிர்வாகம் "பேருந்தில் யாரோ ஒருவர் இடித்துவிட்டது போல் நினைத்துக்கொள்" என்று கடந்து போனபோது எப்படித் துடித்துப் போயிருக்கும்? இனி இந்த வாழ்வே வேண்டாம் என்று ஒரு இளம்பெண் முடிவுக்கு வரும்போது மரணம் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும், அரசு அமைப்புகளுக்கும் கூட நிகழ்கிறது.

 

நாம் இத்தனை பேர் இருந்தும் அந்த குழந்தை தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக தன்னந்தனியே போராடி தோல்வியுற்று இறுதியாக மரணத்தை தேர்ந்தெடுத்துவிட்டது. எவ்வளவு பெரிய கொடுமை, வலி, வேதனை!

 

இன்னும் எவ்வளவு காலம் கல்விக்கூடங்களை இப்படி பாதுகாப்பற்ற இடங்களாக வைத்துக் கொண்டிருக்கப் போகிறோம். நேற்று பத்மா சேஷாத்ரி, இன்று சின்மயா வித்தியாலயா நாளை?

 

நமது பிள்ளைகள் ஏன் பள்ளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளை வெளியில், வீட்டில் சொல்லமுடியவில்லை? ஏன் பாலியல் குற்றவாளிகள் அச்சமற்று திரியும் வீதிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுகின்றனர்? ஏன் அவர்களுக்கு யாருமில்லை? சட்டம், நீதி அவர்கள் வாழும்போது ஏன் வரவில்லை?

 

இப்படி எத்தனையோ தீராத கேள்விகள் உள்ளன. வெறும் சட்டமும், தண்டனையும் மட்டும் இந்த கொடுமையான குற்றங்களை தடுத்துவிடாது. அவற்றோடு வலுவான உளவியல் ஆதரவும், ஆழமான பாலியல் கல்வியும் தேவை.

 

கல்விக் கூடங்களில் இம்மாதிரியான பாலியல் குற்றங்கள், சாதிய, பாலின ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் சுதந்திரமான, கனிவு மிகுந்த, அதிகாரம் மிக்க அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் அச்சமற்று அந்த அமைப்புகளை அணுகும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

 

உளவியல்,சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.இப்படிப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அவை தொடர்ந்து இயங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். உண்மையான கல்விக்கு அடிப்படையான தேவை கண்ணியமும்,பாதுகாப்புமான சூழலுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜோதிமணி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India Alliance will win all 40 constituencies says Jothimani

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற  தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும்,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த ஜோதிமணி, “இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் எனக்கு மகத்தான  வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்”  எனக் கூறினார்.

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.