
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக, மாநில அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்தைக் கூட்ட உத்தரவிட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் -
தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமையைத் தடுப்பதற்காக, கடந்த 1989-ஆம் ஆண்டு, மத்திய அரசால் இயற்றப்பட்ட வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ், மாநில அளவில் ஆண்டுக்கு இரு முறையும், மாவட்ட அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், கண்காணிப்புக் குழுவைக் கூட்டி, சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்து, மத்திய அரசுக்கு ஆண்டுதோறும், மார்ச் 31-ஆம் தேதிக்குள், அதுதொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற கண்காணிப்புக் குழு கூட்டங்கள் நீண்ட ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. குறிப்பாக இந்த ஊரடங்கு காலகட்டத்தில், கொலை, ஆணவக் கொலை, சாதி ரீதியிலான அடக்குமுறை போன்றவற்றால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, தமிழக அரசுக்கு கடந்த ஜூன் மாதம் மனு அளித்தேன். நீதிமன்றம், இதில் தலையிட்டு உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவைக் கூட்ட உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)