/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras5633.jpg)
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கதிட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 2017- ஆம் ஆண்டு தொடங்கியது.
விரிவாக்கதிட்டத்திற்கு எதிராக அந்தபகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை காளபட்டியைச் சேர்ந்த அம்மணியம்மாள் உள்ளிட்ட 12 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் முறையான கருத்து கேட்கவில்லை, தங்களது எதிர்ப்புகளை பரிசீலிக்கவில்லை, தங்களுடைய நிலத்திற்கு செல்ல பாதை கிடைக்காது. எனவே, விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து நிலம் கையகப்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிலம் கையகப்படுத்த தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடாக நில உரிமையாளர்களுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டு, அந்த தொகையை பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுக்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கிவிட்டது. வழக்கு நிலுவையில் உள்ளபோதே, இழப்பீடு பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.எனவே, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, திட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தடையை நீக்கிநிலத்தைகையகப்படுத்தி, திட்டத்தைதொடரலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர். இழப்பீடு பெறாதவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். பாதை தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)