Advertisment

கோவையில் லாரி மோதியதில் இரண்டு சிறுமிகள் பலி

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி சாலையில் உள்ள புது பாலம் அருகே லாரி மோதி 2 பள்ளி மாணவிகள் தலை நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

coimbatore incident

பெருகிவரும் சாலை விபத்தினை கட்டுப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் அதிகமாக சாலையில் பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாநகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை அந்தந்த ஊருக்கு ஏற்ப நேரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கோவை மாநகரில் காலையில் 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கனரக வாகனங்கள் உள்ளே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதியை மீறி கனரக வாகனங்கள் சாலையில் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படி வரும் வாகனங்கள் அதிவேகமாகவும் அதிக எடைகளுடனும் வருவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது.

Advertisment

இப்படி கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி கூட சிங்காநல்லூர் பாலம் அருகே காலை 8.35 மணியளவில் பள்ளி மாணவி மீது லாரி மோதியதில் மாணவியின் கால் உடைந்து மாணவி துடி துடித்த சோக சம்பவம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் மீண்டும் இன்று காலை 8.30 மணியளவில் விதியை மீறி வந்த டிப்பர் லாரி மோதி இரண்டு பள்ளி மாணவிகள் பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியை சேர்ந்த ராமனின் மகன் வெங்கடேஷ்.இவர் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் TN 40 P 4726 என்ற எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் தனது மகள்களான காயத்ரி (9) மற்றும் கீர்த்தனா(7) ஆகியோரை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது TN 37CV 0213 என்ற எண் கொண்ட டிப்பர் லாரிரத்தினபுரி புதுப்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பள்ளி மாணவிகள் 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், வெங்கடேசனை சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து பள்ளி மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், லாரியை ஓட்டி வந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

accident Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe