/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_559.jpg)
கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர் பகுதி அருகே உள்ள பி.கே.புதூரைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 42). இவர், கோயம்புத்தூர் மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார்.
வழக்கம்போல பணிக்குச் சென்றவிட்டு வீடு திரும்பிய ரங்கசாமி, தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவன் மயங்கிய நிலையில் இருக்கிறார் என ரங்கசாமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது மனைவி சேர்த்துள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ரங்கசாமி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது செல்ஃபோனில் பேசி, பதிவுசெய்த வீடியோவைக் காவல்துறையினர் கைபற்றியுள்ளனர். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது,“மாநகராட்சி மருத்துவமனையில் ஊழியர் ஒருவரும், இளம்பெண்ணும் அறையில் தனிமையில் இருந்தனர். அதை நான் பார்த்துவிட்டேன்.
இதனால், இளம்பெண் உடை மாற்றுவதை நான் வீடியோ மற்றும் ஃபோட்டோ எடுத்ததாக அந்த இளம்பெண்ணும், ஒரு வாலிபர் மற்றும் ஒரு செவிலியர் ஆகிய 3 பேரும் என் மீது அபாண்டகுற்றத்தைச் சுமத்தி மிரட்டினார்கள். நான் செய்யாத தவறைச் செய்ததாகக் கூறி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னால் இனி தலைநிமிர்ந்து வாழ முடியாது. என் சாவுக்கு அவர்கள் 3 பேர்தான் காரணம்.” என அந்த வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.
தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் என 3 பேரின் பெயரைக் குறிப்பிட்டு ரங்கசாமி பதிவுசெய்த வீடியோ, கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ரங்கசாமியின் தற்கொலைக்குக் காரணமான மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் மற்றும் உறவினர்கள் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)