Coimbatore Gears Subramaniyam passes away

Advertisment

கோவை மக்களுக்கு பரிச்சியமான சாந்தி சோசியல் சர்வீஸ் (எஸ்.எஸ்.எஸ்) நிர்வாக அறங்காவலர் சுப்ரமணியம், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார்.

கோவை சாந்தி கியர்ஸ் முன்னாள் இயக்குனரும் எஸ்.எஸ்.எஸ். அமைப்பின் அறங்காவலருமானவர் சுப்பிரமணியம் (78). தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், 1972ஆம் ஆண்டு ஒரு ‘லேத்’ இயந்தரத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு ‘கியர் வீல்கள்’ தயாரிக்க ஆரம்பித்தார்.

ஆரம்ப கால கட்டத்தில் ஜவுளி இயந்திரங்களுக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்தவர். பின்னர் தொழிலை விரிவாக்கம் செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துவந்தார். இஸ்ரோ நிறுவனதிற்கும் இவரது தயாரிப்புகள் கொடுக்கபட்டன.

Advertisment

கடந்த சில வருடங்களுக்குமுன் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சாந்தி கியர்ஸ் விற்கபட்ட நிலையில்,பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கி அந்த அமைப்பின் அறங்காவலராக இருந்து வந்தார்.

இந்த அமைப்பின் மூலம் லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை கடந்த 24 ஆண்டுகளாக நடத்தி வந்தார். சிங்காநல்லூர் பகுதியில் இயங்கிவரும் சாந்தி சோசியல் சர்வீஸ் வளாகத்தில் தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் 30 ரூபாயில் மதிய உணவு, குறைந்த விலைவில் காலை சிற்றுண்டி என தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் வந்துச் சென்ற வண்ணமாக காணப்படும்.

Advertisment

அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30, மருந்துகளில் 30% தள்ளுபடி, குறைந்த பணத்தில் பரிசோதனை என பல்வேறு சலுகைகைகள் இருந்த காரணத்தால் எப்போதும் மக்கள் கூட்டமாகவே காணப்படும்.சுப்ரமணியம் நடத்தியசாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல், ஸ்டாக் வரும்போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படுவதால் அங்கும் வாகனதிற்கு எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவது வழக்கம்.

இதன் எதிர்புறம் சாந்தி சோசியல் சர்வீஸ் இலவச மின்மயானமும் செயல்பட்டு வருகின்றது. தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள கூடாது என ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.

Coimbatore Gears Subramaniyam passes away

கடந்த ஒரு மாததிற்கு முன் 78 வயதான சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க கலந்துக்கொண்டனர்.